காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் உள்கட்சி மோதல்களும், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீதான அதிரடிப் புகார்களும் சத்தியமூர்த்தி பவனையே அதிர வைத்துள்ளது.
2021-ல் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை 28 தொகுதிகளாக உயர்த்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் மீண்டும் செல்வப்பெருந்தகை களம் காண, வேளச்சேரியில் ஆசன் மௌலானா, காரைக்குடியில் மாங்குடி எனப் பட்டியல் நீள்கிறது. ஆனால், இந்தப் பட்டியலுக்குப் பின்னால் நடந்துள்ள ‘தொகுதி டீல்’ குறித்த தகவல்கள் இப்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.
திமுக தலைமையுடன், குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை காட்டி வரும் அதீத நெருக்கம் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு நீண்ட நாட்களாகவே உறுத்தலாக இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை விட, திமுகவின் ‘பி-டீம்’ போலவே அவர் செயல்படுவதாக டெல்லி மேலிடம் கருதுகிறது.
சமீபத்தில் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அவர் பேசியதைச் செல்வப்பெருந்தகை மொழிபெயர்த்த விதம் பெரும் சர்ச்சையானது. ராகுல் சொல்ல வந்த கருத்தைத் திரித்து, திமுகவிற்குச் சாதகமாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது ராகுல் காந்தியை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்தச் சூழலில்தான், திடீரென தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதாகச் செல்வப்பெருந்தகை ஒரு தகவலைப் பரப்பினார். உடனே, ‘மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை’ என முதல்வர் ஸ்டாலின் அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார். ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே வருமான வரித்துறை, “நாங்கள் செல்வப்பெருந்தகை வீட்டில் எந்தச் சோதனையும் நடத்தவில்லை” என அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது.
எதிர்க்கட்சிகள் இதனை ‘ செல்வப்பெருந்தகையின் மிகப்பெரிய நாடகம்’ என விமர்சிக்கின்றன. டெல்லி மேலிடத்தின் கோபத்தில் இருந்து தப்பிக்கவும், மக்களிடம் அனுதாபத்தைப் பெறவும் அவராகவே ஒரு பொய்யான தகவலைப் பரப்பியதாகக் கூறப்படுகிறது.
செல்வப்பெருந்தகைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவல்கள் இன்னும் அதிர வைக்கின்றன. அவர்கள் இதுகுறித்து ‘ ‘கடந்த தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட சில தொகுதிகளை, இந்த முறை திமுகவே எடுத்துக் கொள்ளும் வகையில் காய்களை நகர்த்தியுள்ளார். இதற்காக அந்தந்த தொகுதி திமுக முக்கியப் புள்ளிகளிடம், “இந்தத் தொகுதியை காங்கிரஸிடம் இருந்து விடுவித்துக் கொடுக்கிறேன், அதற்கு 2 கோடி ரூபாய் வேண்டும்” என பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. 1 கோடி ரூபாய் அட்வான்ஸ், வேட்பாளர் அறிவிப்பிற்குப் பிறகு 1 கோடி எனப் பல கோடி ரூபாய் கைமாறியுள்ளது.
மறுபுறம், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சீட் கேட்கும் நிர்வாகிகளிடமும், ஏற்கெனவே காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளை திமுக இப்போது கேட்டு வருகிறது. மேலிடத்தை நான் சமாளிக்க வேண்டும், அதற்கு நிர்வாகிகளை சரிக்கட்ட வேண்டும் என கூறிப் பல கோடிகளைச் சுருட்டியுள்ளார்.
செல்வப்பெருந்தகையின் இந்த ‘பண வேட்டை’ குறித்த தகவல்கள் மத்திய உளவுத்துறை மூலம் ஏற்கனவே டெல்லிக்குச் சென்றுவிட்டன. விரைவில் வருமான வரித்துறை அல்லது அமலாக்கத்துறை உண்மையிலேயே சோதனையில் இறங்கலாம் என்கிற அச்சம் அவருக்கு ஏற்பட்டுவிட்டது.
“எப்படியும் மாட்டிக்கொள்ளப் போகிறோம், அதற்கு முன்னால் நாமே ஒரு ‘ரெய்டு’ நாடகத்தை நடத்திவிட்டால், பிறகு உண்மையிலேயே ரெய்டு நடந்தாலும் அதை ‘அரசியல் பழிவாங்கல்’ என்று சொல்லித் தப்பித்துவிடலாம்” என்பதே அவரது கணக்காக இருப்பதாக கூறுகின்றனர்.
செல்வப்பெருந்தகையின் இந்த இரட்டை நிலைப்பாடு காங்கிரஸைக் கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. ஒருபுறம் ராகுல் காந்தியின் அதிருப்தி, மறுபுறம் ஊழல் புகார்கள் எனச் சிக்கியிருக்கும் அவர், 2026 தேர்தலுக்குப் பிறகு கட்சிப் பதவியில் நீடிப்பாரா என்பதே சந்தேகம்தான் என்கிறார்கள் கதர்சட்டை நிர்வாகிகள்.
