Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Seeman Vijay

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலின்போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் உள்ளிட்ட ஏழு கட்சியினரைப் போலீசார் கைது செய்துள்ளதற்கு, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்காம் தேதி, முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் சாலைப் பேரணி மேற்கொண்டார். அப்போது, வீராசிமங்கலம் பகுதியில் முதலமைச்சர் வருவதற்கு முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா தனது தொண்டர்களுடன் வாகனப் பேரணியாக வந்துள்ளார். அவர்களைப் போலீசார் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பதாகை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கார்த்திகா தலைமையிலான கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கார்த்திகா, அவரது கணவர் உள்ளிட்ட ஏழு நாம் தமிழர் கட்சியினரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள சீமான், அரசியல் பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்குகளைப் புனைந்து, கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரைக் கைது செய்திருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஆட்சியும் அதிகாரமும் நிரந்தரமானவை அல்ல என்றும், தற்போதைய ஆட்சி வீழும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  திமுக-வையே தோற்கடித்த விஜய்க்கு இப்படியொரு நெருக்கடியா..? உளவுத்துறை ரிப்போர்ட்டால் தவிக்கும் தவெக..!

தாராபுரம் இடைத்தேர்தலின் இறுதிநாள் பிரசாரத்திற்கு நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள சீமான், முதலமைச்சர் விஜய் சாலைப் பேரணி சென்ற வழியில் கார்த்திகா தனது கட்சியினருடன் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, அவரைக் குறிவைத்து தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைப்பது பாசிசத்தின் உச்சம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், “இந்த ஆட்சியும் அதிகாரமும் நிரந்தரமானவை அல்ல என்பதை உணராமல், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது கீழ்த்தரமான அரசியல் இல்லையா? இத்தகைய அரசியலைச் செய்வதற்காகத்தான் மேடைகள்தோறும் உங்களைத் தூய சக்தி என்று கூறிக்கொண்டீர்களா, முதலமைச்சர் விஜய் அவர்களே?” என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கும் பொதுஅமைதியும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், அவற்றைச் சீரமைக்க காவல்துறையைப் பயன்படுத்தாமல், அரசியல் பழிவாங்கலுக்காகப் பொய் வழக்குகளைப் புனைந்து கார்த்திகாவைக் கைது செய்வது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, நாகையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் நூறு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளைக் கடத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்தை முன்கூட்டியே கண்டறிந்து கைது செய்ய முடியாத காவல்துறை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குத் துணைபோவதாக சீமான் விமர்சித்துள்ளார்.

இதையும் படியுங்க  "அன்று பனையூரில் தோளில் கை... இன்று கோட்டையில் மௌனம்!" - முதல்வருக்கு தூய்மைப் பணியாளர்களின் நேரடி கேள்வி! 

மேலும், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜயமோகன் மீது பெண் நிர்வாகி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரில் கைது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்தும், செய்தியாளர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மீதும், தூத்துக்குடி மாவட்டம் தீவைகுண்டத்தில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்படும் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இத்தகைய சம்பவங்களில் நடவடிக்கை எடுக்காமல், அறவழியில் போராடிய கார்த்திகா உள்ளிட்ட ஏழு நாம் தமிழர் கட்சியினர் மீது மட்டும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது மக்களுக்கான ஆட்சியா என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதியாக, பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகா, அவரது கணவர் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யை வலியுறுத்தியுள்ள சீமான், இல்லையெனில் அதற்கான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படியுங்க  "ஆரம்பிக்கவே இல்ல… அதுக்குள்ள விழுந்த முட்டுக்கட்டை! 'அவசர அரசாணை' கொடுத்த சிக்கல்…

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago