வீட்டு கடன் மற்றும் வாகன கடன் பெற்றிருப்பவர்களுக்கு ஒரு கசப்பான செய்தி காத்திருக்கிறது. ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அதன் நேரடி தாக்கம் தற்போது உங்கள் மாத தவணைகளான EMI-களிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், அமெரிக்க டாலர் முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுவிழந்து வருகிறது. இதன் விளைவாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்து, விரைவில் ₹100 அளவைக் கடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சரிவை கட்டுப்படுத்தவும், இந்திய பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடினமான முடிவுகளை எடுக்கத் தயாராகி வருகிறது. வரும் ஜூன் 3ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு கூட உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் 5ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.
இந்தக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் குறைந்தது 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1% வரை குறைக்கப்பட்டிருந்த வட்டி விகிதம், இப்போது போர் சூழ்நிலையால் மீண்டும் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 5.25% ஆக உள்ள ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால், வங்கிகள் சாமானிய மக்களுக்கு வழங்கிய கடன்களுக்கான வட்டியை உடனடியாக உயர்த்தும்.
இதன் நேரடி விளைவாக, நீங்கள் செலுத்தும் கடன் வட்டித்தொகை அதிகரித்து, உங்கள் கையில் இருக்கும் சேமிப்பு குறையும் நிலை உருவாகும்.
ஜூன் மாதக் கூட்டத்தில் இந்த உயர்வு தவிர்க்கப்பட்டாலும், ஆகஸ்ட் மாதக் கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்வது உறுதி என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கச்சா எண்ணெய் மட்டுமல்லாமல், தங்கம், வெள்ளி உள்ளிட்ட இறக்குமதி பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்துவதைத் தவிர ரிசர்வ் வங்கிக்கு வேறு வழியில்லை என கூறப்படுகிறது.
எனவே, கடன் வாங்க திட்டமிடுபவர்களும், ஏற்கனவே கடன் சுமையில் இருப்பவர்களும் தங்களது நிதி திட்டமிடலை இப்போதே மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனமானதாக இருக்கும். உலக அரசியல் பதற்றத்தின் எதிரொலி இப்போது உங்கள் வீட்டின் சமையலறையையும், பணப்பையையும் நேரடியாக பாதிக்கத் தொடங்கியுள்ளது.
