Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பாழடைந்த கல்குவாரி குட்டையில், உடலில் கல்லைக் கட்டி வீசப்பட்ட நிலையில் 52 வயது பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக பணம், நகைகள் மற்றும் சொத்துகளைத் தர மறுத்ததால், பெண்ணை அவரது கணவரும் மருமகனும் சேர்ந்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வாணியம்பாடி பாரத் நகர் பகுதியில் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கல்குவாரி குட்டை உள்ளது. கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி, இந்தக் குட்டையில் பெண்ணின் சடலம் மிதப்பதைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததுடன், சடலம் தண்ணீரில் மூழ்கியிருக்க வேண்டும் என்பதற்காக உடலில் பெரிய கல் கட்டப்பட்டு வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பது தெரியவந்தது. 52 வயதான சசிகலா, பாப்பிரெட்டிப்பட்டியில் வளையல் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இதையும் படியுங்க  சசிகலாவின் இன்னொரு முகம்..! பொம்மலாட்ட ராஜதந்திரி..! சல்லி சல்லியாய் உடைந்த சீக்ரெட்..!

சசிகலாவுக்கு உமா மகேஸ்வரி, கீர்த்தனா, தீபா ஆகிய மூன்று மகள்களும், ராகுல் என்ற மகனும் உள்ளனர். அவரது குடும்பத்துக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தும் சசிகலாவின் பெயரில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Republic Tamil

இந்நிலையில், சசிகலாவின் கணவர் அசோகனுக்கும், அவரது மூத்த மகள் உமா மகேஸ்வரியைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட மருமகன் அஸ்லாமுக்கும் கடன் பிரச்சனை இருந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அஸ்லாம், திமுக வட்டார நிர்வாகியாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடனை அடைப்பதற்காக சசிகலாவிடம் பணம், நகைகள் மற்றும் சொத்துகளைத் தருமாறு அசோகனும் அஸ்லாமும் தொடர்ந்து கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், தனது பணம், நகைகள் மற்றும் சொத்துகளை வழங்க சசிகலா கடுமையாக மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அசோகனும் அஸ்லாமும் சேர்ந்து சசிகலாவைக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்த பின்னர், அவரிடம் இருந்த 24 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்க  "குடும்பத்தோட கட்சிக்கு வாங்க..!" அதிமுக-வில் டிடிவி.தினகரன்- சசிகலா..? இபிஎஸ் கொடுத்த அசைன்மென்ட்..!

கொலை செய்த இடத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாணியம்பாடி கல்குவாரி குட்டிக்கு சடலத்தை காரில் எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் சடலத்தில் பெரிய கல்லைக் கட்டி கல்குவாரி குட்டையில் வீசிவிட்டு, எதுவும் நடக்காதது போல் வீட்டுக்குத் திரும்பியதாக போலீசார் கூறுகின்றனர்.

இதற்கிடையே, போலீசாரைத் திசைதிருப்பும் வகையில் அசோகன் தனது மனைவி சசிகலா வீட்டில் இருந்த 24 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்துடன் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்துள்ளார். மேலும், சசிகலாவை மர்மக் கும்பல் காரில் கடத்திச் சென்றதாகவும் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி போலீசில் புகார் அளித்து நாடகமாடியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில் அசோகன் அளித்த புகாரில் சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அசோகனும் அஸ்லாமும் சேர்ந்து சசிகலையை கொலை செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அசோகன் மற்றும் அஸ்லாம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். வாணியம்பாடி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் இணைந்து இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும், சசிகலாவிடம் இருந்து எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் நகைகளை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்க  டோலியில் தொடங்கி... டோலியிலேயே முடியும் நெக்னாமலை மக்களின் வாழ்க்கை..! 

இந்தக் கொலைச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, கொலைக்கான பின்னணியில் சொத்து தகராறு மட்டுமின்றி வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago