நியூயார்க்கில் உள்ள 1,454 அடி உயரமான எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உச்சிப் பகுதியில் ஏறி, ஆபத்தான முறையில் தனது காதலிக்கு மோதிரம் அணிவித்து திருமணக் கோரிக்கை (ப்ரோபோஸ்) வைத்த ரஷ்ய தம்பதியினர், கீழே இறங்கியதும் நியூயார்க் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலக அமைதியை வலியுறுத்தும் பதாகையை கையில் ஏந்தியபடி இந்த சாகசத்தை மேற்கொண்ட அவர்கள், பாதுகாப்பாக கீழே வந்த உடனேயே நியூயார்க் காவல்துறையினர் (NYPD) அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல ‘ரூஃப்டாப்பிங்’ சாகச வீரர்களான இவான் பீர்கஸ் மற்றும் ஏஞ்சலா நிகோலாவ் ஆவர். இவர்கள் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான “ஸ்கைவாக்கர்ஸ்: ஏ லவ் ஸ்டோரி” என்ற ஆவணப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டவர்கள்.
தகவல்களின்படி, எந்தவித பாதுகாப்புக் கயிறுகளோ அல்லது பாதுகாப்பு உபகரணங்களோ இன்றி, பாதுகாப்பு தடைகளை மீறி, 1,454 அடி உயரமுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் ஆன்டெனா கோபுரத்தின் உச்சிப் பகுதிக்கு இந்த ஜோடி ஏறிச் சென்றது.
உச்சிப் பகுதியில் நின்றபடி, “அன்பின் சக்தி, அதிகாரத்தின் மீதான ஆசையை வெல்லும் போது உலகம் அமைதியைக் காணும்” என்ற வாசகம் இடம்பெற்றிருந்த உலக அமைதிக்கான பதாகையை அவர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.
அதன்பின்னர், மிகவும் குறுகலான ஆன்டெனா பகுதியில் நின்றபடி, இவான் பீர்கஸ் தனது காதலி ஏஞ்சலா நிகோலாவுக்கு மோதிரம் அணிவித்து திருமணக் கோரிக்கை வைத்தார்.
இந்த ஆபத்தான சாகசத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்களும், பாதுகாப்புப் பணியாளர்களும் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு நியூயார்க் காவல்துறையின் ஹெலிகாப்டர்களும், அவசரகால மீட்புக் குழுவினரும் விரைந்து சென்றனர்.
இருவரும் பாதுகாப்பாக கீழே இறங்கியவுடன், காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
தற்போது, அவர்கள் மீது அத்துமீறி நுழைதல் (Criminal Trespass), பிறர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் (Reckless Endangerment), திருட்டு நோக்கத்துடன் சட்டவிரோதமாக நுழைதல் (Burglary) உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
