ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனியின் மகனான மொஜ்தபா கமெனி, தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள மாட்டார். இந்தத் தகவலை ஈரானிய உச்ச தலைவரின் பிரதிநிதியான அயதுல்லா ஹக்கீம் இலாஹி தெரிவித்துள்ளார். ”பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார். இஸ்ரேலிய தாக்குதல் குறித்து ஈரானிய பாதுகாப்பு அமைப்புகள் அஞ்சுவதாகவும், அதனால் இறுதிச் சடங்கு நிகழ்வில் இருந்து விலகி இருக்குமாறு மொஜ்தபாவுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அல் ஜசீரா அறிக்கை ஒன்று கூறுகிறது.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்து மேலும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. அல் ஜசீரா அறிக்கையின்படி, ஈரானிய உச்ச தலைவரின் பிரதிநிதியான அயதுல்லா ஹக்கீம் இலாஹி, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தாலும், இரு தரப்பினருக்கும் இடையே ஆழ்ந்த நம்பிக்கையின்மை நீடிக்கிறது. இஸ்ரேலுடனான பதட்டங்களும் தொடர்கின்றன. உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியைத் தவிர, ஈரான் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக எலாஹி கூறினார். இந்த நிகழ்விற்காக ஈரானில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வான் பாதுகாப்புப் படை நாட்டின் வான்வெளியைத் தொடர்ந்து கண்காணித்து, அனைத்து வெளிநாட்டு விமானங்களின் மீதும் சிறப்பு கட்டுப்பாட்டைச் செலுத்தும். ஒரு பிரம்மாண்டமான, கண்ணியமான இறுதிச் சடங்கை உறுதி செய்வதற்காக இராணுவம் தனது அனைத்து வளங்களையும் திரட்டி வருகிறது.
அயதுல்லா அலி கமேனி ஜூலை 9 ஆம் தேதி மஷ்ஹத்தில் நல்லடக்கம் செய்யப்படுவார். இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் ஜூலை 4 ஆம் தேதி தொடங்கும். இந்திய அரசின் சார்பில், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிதா , பீகார் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் ஆகியோர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள். வெளியுறவு அமைச்சகத்தின் தகவல்படி, இரு தலைவர்களும் ஜூலை 3 ஆம் தேதி ஈரான் புறப்படுவார்கள்.
பிப்ரவரி 28 ஆம் தேதி, ஈரானின் அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா கமேனி, அமெரிக்க- இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது மகனும், தற்போதைய உச்ச தலைவருமான முஜ்தபா கமேனியும் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தார். அன்று முதல் அவர் பொதுவெளியில் காணப்படவில்லை. முஜ்தபாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அதனால்தான் அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றும் இஸ்ரேலிய – அமெரிக்க உளவு அமைப்புகள் மீண்டும் மீண்டும் கூறிவந்தன. தற்போது நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், முஜ்தபா தோன்றக்கூடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அவர் தலைகாட்டவில்லை.
