தவெக தலைவர் விஜய் தலைமையில் அமையும் புதிய ஆட்சியில் தலைமை நிர்வாகப் பொறுப்பை பிடிக்கவும், முக்கியமான இலாகாவை கைப்பற்றவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் போட்டா போட்டி நடந்துகொண்டிருக்கிறது.
காய் நகர்த்தும் பிரதீப் யாதவ்?
இந்த விவாதங்களின் மையப்புள்ளியாகி இருக்கிறார் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ். இதில் முன்னணியில் இருக்கிறார் திமுக ஆட்சியில் துணை முதல்வர் உதயநிதியின் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ்.! இவர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் சகோதரர் மு.க.அழகிரி, மத்திய அமைச்சராக இருந்த போது அவரிடம் செக்ரட்டரியாகவும் இருந்தவர்.

அழகிரியிடம் இருந்த போதும் சரி, உதயநிதியிடம் இருந்த போதும் சரி… பிரதீப் யாதவ்வின் பெர்ஃபாமன்ஸ் மிகவும் மோசமாக இருந்ததாக ஸ்டாலினிடம் பல புகார்கள் போயிருக்கின்றன. ஸ்டாலின், இதற்காக பிரதீப் யாதவ்வை கண்டித்திருக்கிறார்.
தற்போது திமுக ஆட்சி தோல்வியுற்றுள்ளது. விஜய் தலைமையில் புதிய ஆட்சி அமையவிருக்கிறது. இந்த நிலையில், விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் மூலம் அவரது தொடர்பு எனக்கு கிடைத்துள்ளது. விஜய்யிடம் பேசிவிட்டேன். அவர் ‘ ‘அரசு நிர்வாகத்தை நீங்கள் கவனியுங்கள்” என என்னிடம் சொல்லியிருக்கிறார்” என்று சக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் உதார் விட்டபடி இருக்கிறார் பிரதீப்யாதவ்.
மேலும், மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி தொடர்பான அனைத்து ஊழல் விவகாரங்களும் எனக்குத் தெரியும். விஜய் ஆட்சியில் நான் தான் தலைமைச்செயலாளர். தலைமைச்செயலாளர் ஆனதும் திமுக வின் ஊழல்களை ஒட்டுமொத்தமாக விஜய்யிடம் தெரிவித்து, திமுக-வுக்கு ஆதரவாக இருந்த அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வைப்பேன்.
எனக்கு ஆதரவாக யார் யார் இருந்தார்களோ அவர்களை உயர் பதவிக்கு கொண்டுவருவேன். இனி கோட்டையில் எல்லாமே நான் தான். விஜய்யின் செயலாளராக மங்கத் ராம் ஐ.ஏ.எஸை கொண்டு வரப்போகிறேன். உள்துறைச் செயலாளராக எனது சகலையான டி.பி. யாதவை நியமிக்கப்போகிறேன். மூத்த அதிகாரி ககன்தீப் சிங் பேடி ஒரு முக்கியப் பொறுப்பு வழங்கப்போகிறேன். திமுக ஆதரவு அதிகாரிகளை கூட்டிப் பெருக்கி அள்ளி எறியப்போகிறேன். விஜய் முதல்வராகட்டும். அப்புறம் பாருங்கள்… நான் என்னென்ன செய்யப் போகிறேன் என்பதை” என்று ஏகத்துக்கும் உதார் விடும் பிரதீப் யாதவ், மற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து வருகிறாராம். கோட்டையில் இதுதான் பரபரப்பாக பேசப்படுகிறது.

கடுப்பில் சீனியர் அதிகாரிகள்
பிரதீப் யாதவ்வின் இந்த உதாரை அறிந்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி கள் பலரும், புதிய தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ்வா? வெளங்கிடும். இவர் மீதே ஏகப்பட்ட புகார்கள் இருக்கிறது. ஏற்கனவே டெல்லியின் ‘கைப்பாவை’ என்ற விமர்சனத்திற்கு ஆளான ஒருவர், அனுபவமில்லாத புதிய முதல்வரின் நிழலாகச் செயல்படுவது நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் என அவர்கள் அஞ்சுகிறார்கள். ”இவர் மற்றவர்களை பழிவாங்குவாரா? இவரைப் போன்ற அதிகாரிகளிடம் விஜய் உஷாராக இருக்க வேண்டும். இல்லையெனில் 1 மாதத்தில் ஆட்சி நிர்வாகம் சந்தைக்கு வந்துவிடும்” என்று எச்சரிக்கின்றனர் கோட்டையிலுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பினர். “விஜய்யின் அரசியல் பயணம் தொடக்கத்திலேயே திண்டாட்டமாகிவிடுமோ?” என்கிற கவலை மூத்த அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.
விஜய்யின் சவால்
உதயநிதியின் நிழலாக இருந்த ஒருவரையே விஜய் முழுமையாக நம்புவது மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகமாக அமையாதா? என்பதே நடுநிலையாளர்களின் கேள்வி.
