https://republictn.com/

தமிழக முதலமைச்சர் விஜய்யை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் நேரில் சந்தித்து, தனித்துவமான அரச தோற்ற ஓவியம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யை, திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், தனது வித்தியாசமான சிந்தனை மற்றும் படைப்பாற்றலுக்குப் பெயர் பெற்ற பார்த்திபனும் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, விஜய்க்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஓர் அரச தோற்ற ஓவியத்தை பார்த்திபன் பரிசாக வழங்கினார். அந்த ஓவியத்தில், விஜய் அரசர் போன்ற கம்பீரமான உடையில் அரியணைக்கு அருகில் நிற்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஓவியம் பொருத்தப்பட்டுள்ள புகைப்படச் சட்டகத்தின் பக்கவாட்டில் சிறிய அளவிலான அரியணை மாதிரியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசு, விஜய்யின் புதிய அரசியல் பயணத்தையும் முதலமைச்சர் பொறுப்பையும் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனுடன், தனது வழக்கமான கவிதை நயத்தில் எழுதப்பட்ட வாழ்த்து மடலையும் பார்த்திபன் இணைத்துள்ளார்.

அதில்,

“சினிமாயணம் டு சி.எம் ஆசனம்!
அராஜகமற்ற ஆட்சியைத் தர,
அரகஜா திலகமிட்டு – விஜய் பேரரசராக
அரியணையை அலங்கரிக்கும் –
உலக அரசியல் அதிர்வின் மெழுகுக்கு / அதிர்Win முதல்வருக்கு வாழ்த்துகள்!

எனக் குறிப்பிட்டு, “பிரியமுடன் பார்த்திபன்” என்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக விஜய் தனது நெற்றியில் ‘அரகஜா’ திலகம் அணிந்து வருவதைச் சுட்டிக்காட்டும் வகையில் இந்தக் கவிதை எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பார்த்திபன் வழங்கிய அரச தோற்ற ஓவியமும், அவரது கவிதை வடிவிலான வாழ்த்து மடலும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago