தமிழக அரசியல் களம் எப்போதும் உணர்வுகளாலும், விசுவாசத்தாலும் கட்டமைக்கப்பட்டது. ஒரு கட்சியின் அடிமட்டத் தொண்டன், தன் தலைவனுக்காகத் தெருக்களில் இறங்கி உழைப்பது, வெறும் அதிகாரத்திற்காக மட்டுமல்ல; தன் தலைவன் அரியணை ஏறும்போது நமக்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்கிற ஒற்றை நம்பிக்கையில்தான். தற்போதைய தவெக நிலைமையும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள், ஆரம்பகால ரசிகர்களின் மனநிலை ஏமாற்றத்தால் குமுறுகிறது.
அதிகாரம் யாருக்கு?
விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது நற்பணி மன்றங்களிலும், பின்னர் விஜய் மக்கள் இயக்கத்திலும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் அவரது ரசிகர்கள். போஸ்டர் ஒட்டுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, தலைவனின் கட்டளையைத் அடிமட்டத்திற்குக் கொண்டு சேர்ப்பது என தவெக-வின் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர்கள் இவர்களே.

ஆனால், தேர்தல் நெருங்கிய நேரத்தில் மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கும், சமீபத்தில் இணைந்த புதிய முகங்களுக்கும், முன்னாள் அதிகாரிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து வேட்பாளர் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. 108 வேட்பாளர்கள் மாற்றுக் கட்சியில் வந்தவர்கள். ரசிகர் மன்றத்திற்கு தொடர்பே இல்லாதவர்கள். இதையெல்லாம் விஜயின் வெற்றிக்காகப் பொறுத்துக் கொண்ட ரசிகர்களுக்கு, அமைச்சரவை பங்கீட்டிலும் பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தற்போது பதவியேற்றுள்ள 9 அமைச்சர்களில், புஸ்சி ஆனந்தைத் தவிர வேறு யாருமே விஜய்யின் ஆரம்பகால ரசிகரோ அல்லது மக்கள் இயக்கப் பின்னணி கொண்டவரோ இல்லை
விஜய் அமைச்சரவையில், தவெக-வை சேர்ந்த சிலருக்கும், காங்கிரஸ், அதிருப்தி அதிமுகவை சேர்ந்த சிலருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. புதுச்சேரி விஜய் ரசிகர் மன்ற கவுரவச் செயலாளராக இருந்த ஆனந்த், புதுச்சேரி புஸ்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான பின்பு விஜய் ரசிகர் மன்றத்தின் பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு அறிமுகமாகி, பின்னர் விஜய்க்கும் நெருக்கமாகி அகில இந்திய விஜய் ரசிகர் மன்றப் பொறுப்பாளர், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் என பல பதவிகளை வகித்த அவர், தமிழகத்துக்குக் குடிபெயர்ந்தார்.

ஆதவ் அர்ஜுனா, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து தவெக-தொடங்கியபோது அக்கட்சியில் சேர்ந்தவர். நாமக்கல் மாவட்டம், குமாரமங்கலத்தைச் சேர்ந்த அருண்ராஜ் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி. தவெக தொடங்கியபோது கட்சியில் சேர்ந்தார்.
செங்கோட்டையன் மூத்த அரசியல்வாதியாக இருந்தாலும், அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வந்தவர்தான். சிடிஆர். நிர்மல்குமார், பாஜக, அதிமுகவில் இருந்துவிட்டு அதன்பிறகு தவெக கட்சியில் இணைந்தவர். ராஜ்மோகன், மேடை நிகழ்ச்சி தொகுப்பாளர், பட்டிமன்றப் பேச்சாளர். விஜய் தவெகவை தொடங்கியபோது, அக்கட்சியில் இணைந்தார்.
மருத்துவர் டி.கே.பிரபு, விஜய் அபிமானியாக இருந்தாலும், அவரது மக்கள் இயக்கத்தில் பணியாற்றவில்லை. தவெகவை தொடங்கியபோது அக்கட்சியில் இணைந்துள்ளார். கீர்த்தனா, விருதுநகரில் சுயேச்சையாகப் போட்டியிட திட்டமிட்டுதான் பணியாற்றி வந்தார். தவெக சிவகாசி வேட்பாளராக அறிவித்தபோதுதான், அவர் அக்கட்சியில் இணைந்த விவரமே கட்சி நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது. விஜய்யின் ரசிகராகவும், அவரது மக்கள் இயக்கத்தில் பணியாற்றி எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றவர்களுக்கும் அமைச்சரவையில் பிரதி நிதித்துவம் வழங்கப்பட வில்லை.

ஆனால், மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல், எம்எல்ஏ- வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதும், கட்சியில் சமீபத்தில் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், விஜய் ரசிகராக இருந்தவர்களுக்கு அந்த தொகுதிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அப்படி மதுரை மாவட்டத்தில் விஜய் ரசிகராக இல்லாமல் திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிடிஆர்.நிர்மல் குமார், மதுரை கிழக்கு, கார்த்திகேயன், சோழவந்தான், கருப்பையா , மதுரை மத்தி முஸ்தபா போன்றவர்கள் தற்போது தவெக-வில் முக்கியத்துவம் பெற்றுள்ளனர். ஆனால், அவரது ரசிகர்கள், ஆட்சி அதிகாரத்திலும், கட்சியிலும் முக்கியத்துவம் பெற முடியாமல் தவிக்கிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் மொத்த முள்ள 10 தொகுதிகளில் தவெக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல், சிவகங்கை மாவட்டத்திலும் மொத்தமுள்ள 4 தொகுதிகளையும் கைப் பற்றியது. திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் 4 தொகுதிகளையும், தேனியில் 2 தொகுதிகளையும் தவெக கைப்பற்றியது.

இந்த மாவட்டங்களில் வெற்றிபெற்ற விஜய் ரசிகராக இருந்து தற்போது எம்எல்ஏ ஆனவர்கள் சிலருக்கு அமைச்சரவை விரிவாக்கத்தில் வாய்ப்பு வழங்கப்படுமா ? என்ற எதிர்பார்ப்பு, தென் மாவட்ட ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தலைவனுக்காக உழைத்த ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதா அல்லது ஆட்சியை நகர்த்த அனுபவமிக்க புதியவர்களைப் பயன்படுத்துவதா என்கிற தர்மசங்கடமான சூழலில் விஜய் இருக்கிறார்.
