லாகூரில் உள்ள பல்வேறு சாலைகள், தெருக்களின் பெயர்களை, பிரிவினைக்கு முந்தைய பெயர்களுக்கு மீண்டும் சூட்டும் திட்டத்திற்கு பாகிஸ்தானின் பஞ்சாப் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானின் பழைய நகரமான லாகூரின் பிரிவினைக்கு முந்தைய பாரம்பரியத்தை மீட்டெடுப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக, லாகூரில் உள்ள பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க தெருக்கள், சாலைகள், சந்துகளுக்குப் புதிய பெயர்கள் சூட்டப்பட்டு, அவற்றின் அசல் பிரிட்டிஷ் கால, இந்துக்களுடன் தொடர்புடைய பெயர்கள், இஸ்லாமியப் பெயர்கள், உள்ளூர் பிரமுகர்களின் பெயர்களால் மாற்றப்பட்டுள்ளன.
பஞ்சாப் அரசு அதிகாரி ஒருவர், “சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மரியம் நவாஸ் தலைமையில் நடைபெற்ற பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டத்தில், லாகூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பல்வேறு தெருக்கள், சாலைகளின் அசல் மற்றும் வரலாற்றுப் பெயர்களை மீட்டெடுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நகரத்தின் கலாச்சார அடையாளம், பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்காகவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த முன்னெடுப்பிற்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தலைமை தாங்குகிறார். அவரே லாகூர் பாரம்பரியப் பகுதிகளைப் புனரமைக்கும் திட்டத்திற்கும் தலைமை தாங்குகிறார். கடந்த வாரம், அவரது முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது” என்றார்.
கடந்த காலத்தில் பெயர் மாற்றப்பட்ட லாகூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க தெருக்கள், சாலைகளில் குயின்ஸ் ரோடு, ஜெயில் ரோடு, டேவிஸ் ரோடு, லாரன்ஸ் ரோடு, எம்பிரஸ் ரோடு, கிருஷ்ண நகர், சந்த்நகர், தரம் புரா, பிராண்ட்ரெத் ரோடு, ராம் கலி, டெம்பல் தெரு, லக்ஷ்மி சௌக், ஜெயின் மந்திர் ரோடு, குமார்புரா, மோகன்லால் பஜார், சுந்தர் தாஸ் ரோடு, பகவான் புரா, சாந்தி நகர் மற்றும் அவுட்ஃபால் ரோடு ஆகியவை அடங்கும்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மின்டோ பூங்காவில் (கிரேட்டர் இக்பால் பூங்கா) ஒரு பாரம்பரிய ‘அக்காரா’ (மல்யுத்த அரங்கம்) மற்றும் மூன்று கிரிக்கெட் மைதானங்களை மீட்டெடுக்கவும் ஷெரீஃப் முன்மொழிந்துள்ளார். இந்த நடவடிக்கை, சேதங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு உத்தியாகப் பரவலாகக் கருதப்படுகிறது.
நவாஸ் ஷெரீஃபின் சகோதரரும் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீஃப், 2015-ல் பஞ்சாப் முதலமைச்சராக இருந்தபோது, ஒரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு வழிவகுக்கும் வகையில், மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிக்கெட் மைதானங்களையும், கிரிக்கெட் கிளப்புகளின் கீழ் வரும் பகுதிகளையும், ஒரு மல்யுத்த அரங்கத்தையும் இடித்ததற்காகக் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தார்.
