சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 14 வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) கருவிகளை சரிபார்க்கும் பணி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் நடைபெற்று வருகிறது.
கடந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தேர்தல் முடிவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, குறிப்பிட்ட 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட EVM மற்றும் VVPAT இயந்திரங்களின் மைக்ரோ கண்ட்ரோலர்களை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திடம் மு.க. ஸ்டாலின் மனு அளித்திருந்தார்.

அந்தக் கோரிக்கையை ஏற்று, ஜூலை 29-ஆம் தேதி முதல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள EVM கிடங்கில் தொழில்நுட்ப சரிபார்ப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஒரு நாளுக்கு இரண்டு வாக்குச்சாவடிகளின் இயந்திரங்கள் வீதம், மொத்தம் ஏழு நாட்களுக்கு இந்த ஆய்வுப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜி.எஸ். சமீரன், பெல் (BEL) நிறுவன பொறியாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவின் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ, கொளத்தூர், காஞ்சிபுரம் மற்றும் ராஜபாளையம் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் தொழில்நுட்ப ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
கொளத்தூர் தொகுதியில் ஆய்வுக்கு கோரப்பட்ட 14 வாக்குச்சாவடிகளில், தினமும் இரண்டு வாக்குச்சாவடிகளுக்கான இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை 30-ஆம் தேதியும், இன்றும் நடைபெற்ற சோதனையின்போது இரண்டு விவிபேட் இயந்திரங்கள் செயல்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், 157-வது வாக்குச்சாவடிக்குரிய கட்டுப்பாட்டு கருவி (Control Unit) மற்றும் மூன்று பேலட் யூனிட்களில் ஒட்டப்பட்டிருந்த முகவரி அட்டைகள் (Address Tags) புதிதாக மாற்றப்பட்டிருந்ததாகவும், இயந்திரங்களின் முன்பக்கத்தில் இருக்க வேண்டிய அரக்கு சீல் (Wax Seal) முறையாக வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். இதனால், இயந்திரங்கள் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை என்ற பலத்த சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், EVM இயந்திரங்களில் இரண்டு முறை மெழுகு முத்திரை (Wax Seal) வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை என்றும் என்.ஆர். இளங்கோ குற்றம்சாட்டினார்.

“வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை அல்லது பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்தால், அந்தத் தேர்தல் முறையான தேர்தலாகக் கருத முடியாது என்பதை அறிவியல் பூர்வமாகவும், சட்ட ரீதியாகவும் நிரூபிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இது தொடர்பாக கடந்த ஜூலை 30-ஆம் தேதி சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கடிதம் வழங்கியுள்ளோம். அந்தக் கடிதத்தில் 19 கேள்விகளை எழுப்பி, பெல் நிறுவன பொறியாளர்களிடம் விளக்கம் பெற்று தருமாறு கேட்டுள்ளோம். அதற்கு, தேவையான விளக்கங்களை பெற்று வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 29, 30, 31 மற்றும் இன்றுவரை நடைபெற்ற அனைத்து தொழில்நுட்ப ஆய்வுகளும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த முழு வீடியோ பதிவுகளையும் உரிய சான்றிதழுடன் எங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளோம்.

மேலும், முகவரி அட்டை இல்லாமல் இருந்த 157-வது வாக்குச்சாவடிக்குரிய இயந்திரத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில், நீதிமன்றத்தை அணுகும்போது அது முக்கிய ஆதாரமாக தேவைப்படும்,” என்று என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.
திமுக தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜி.எஸ். சமீரன், இயந்திரங்களில் காணப்பட்ட எண் முரண்பாடுகள் மனித தவறுகளாக இருக்கலாம் என்று விளக்கம் அளித்தார்.
மேலும், EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் விதிமுறைகளின்படி முறையாகச் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த தொழில்நுட்ப ஆய்வின் இறுதியில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது தொழில்நுட்பக் குறைபாடுகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மறுதேர்தல் நடத்தக் கோரி உரிய நீதிமன்றத்தை அணுக திமுக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
