திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளை “வாரிசு அரசியல்” செய்கிறது என மேடைக்கு மேடை அதிமுக கடுமையாக விமர்சித்து வந்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய ஆளுமைகள் வாரிசு அரசியலுக்கு ஒருபோதும் இடம் கொடுத்ததில்லை. ஆனால், தற்பொழுது அதே அதிமுகவிற்குள்ளும் வாரிசு அரசியல் நிழல் படியத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பரபரக்கின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன்குமார், கட்சியின் அடுத்த முகமாக முன்னிறுத்தப்பட உள்ளாரா?
சி.வி. சண்முகம் உடைத்த ‘டிராமா’ ரகசியம்
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அண்மையில் பேசிய பேச்சு, எடப்பாடி பழனிசாமியின் வாரிசு அரசியல் திட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. “அதிமுக ஒரு குடும்பத்தின் பிடிக்குள் சென்று கொண்டிருக்கிறது” என்று குற்றம் சாட்டிய அவர், “குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போலச் சமூக ஊடகங்களில் செய்திகளைப் பரப்புகிறார்கள். இபிஎஸ் நடத்திய கூட்டத்தில் அவரது மகனை அரசியலுக்குக் கொண்டு வரக் கோரித் தீர்மானம் போடுவது போல நாடகம் ஆடுகிறார்கள். உங்கள் பிள்ளை அரசியலுக்கு வர முழு உரிமை உண்டு, ஆனால் அதற்கு ஏன் இந்த டிராமா?” எனப் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.
திரைமறைவில் ஆட்டிப்படைக்கும் மிதுன்குமார்?
இபிஎஸ் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலம் தொட்டே அவருக்கு உதவியாக இருந்தவர் அவரது மகன் மிதுன்குமார். இபிஎஸ் முதலமைச்சரான பிறகு, மிதுன் அவரது முதுகெலும்பாக மாறிப் பக்கபலமாகச் செயல்படத் தொடங்கினார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், அண்மையில் முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் வரை, யாருக்கு சீட் ஒதுக்குவது, கூட்டணி இடப்பங்கீடு, பாஜக டெல்லி தலைமையுடன் மறைமுகப் பேச்சுவார்த்தை என அனைத்தையும் மிதுன்குமாரே கவனித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
2021-ல் டிடிவி.தினகரனைச் சேர்க்கக் கூடாது என அழுத்தம் கொடுத்தது, 2024-ல் புதுமுக வேட்பாளர்களைக் களம் இறக்கியது, 2026 தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்பே பாஜக கூட்டணிக்கு மூளையாகச் செயல்பட்டது என எல்லாவற்றிலும் மிதுனின் பங்கு இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
சீனியர்கள் வெளியேற்றிய குடும்பத் தலையீடு
அதிமுகவின் முக்கியப் புள்ளியாக இருந்த கே.ஏ. செங்கோட்டையன் கட்சியில் இருந்து வெளியேறியபோது, “கட்சியில் இபிஎஸ் குடும்பத்தினரின் தலையீடு அதிகரித்துவிட்டது. குறிப்பாக இபிஎஸ்-ன் மகன் மிதுன், அவரது மைத்துனர் பேச்சுக்கு மட்டும்தான் மதிப்பு அளிக்கப்படுகிறது” என முக்கியக் காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார். மேலும், 2026 தேர்தலுக்கான ஆந்திரா அரசியல் வியூக நிறுவனத்தை அழைத்து வந்து அதிமுகவிற்குக் களம் அமைத்துக் கொடுத்ததும் மிதுன்தான் என்று சொல்லப்படுகிறது.
இபிஎஸ்-ன் தயக்கமும் வியூகமும்
திமுகவில் உதயநிதி ஸ்டாலின், பாமகவில் அன்புமணி ராமதாஸ், மதிமுகவில் துரை வைகோ போலத் தனது மகனை அதிமுகவில் முன்னிறுத்த இபிஎஸ் ஆசைப்படுகிறார். ஆனால், 30 வருடங்களாக திமுகவை வாரிசு அரசியல் என்று விமர்சித்துவிட்டு, இப்போது தாமே அதைச் செய்தால் தொண்டர்களும், பொதுமக்களும் ஏற்பார்களா? என்ற தயக்கமும் இபிஎஸ்-க்கு உள்ளது.
அதனால்தான், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, காஞ்சிபுரம் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் மூலமாகக் கட்சி கூட்டத்தில் தனது மகனைப் பற்றிப் பேச வைத்து, தொண்டர்களின் மனநிலையை இபிஎஸ் ஆழம் பார்த்து வருகிறார்.
மிதுனுக்கு இளைஞரணி பொறுப்பு?
தமிழக அரசியல் களம் தற்பொழுது விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை என இளைஞர் பட்டாளத்தால் நிரம்பியுள்ளது. இந்த இளைய தலைமுறைப் போட்டியைச் சமாளிக்க அதிமுகவிலும் இளம் இரத்தத்தைப் பாய்ச்ச இபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.
கட்சி கூட்டங்களில் பெரிய அளவில் எதிர்ப்பு எழாவிட்டால், அடுத்த சில மாதங்களிலேயே மிதுன்குமாருக்கு அதிமுகவில் ‘இளைஞரணி’ சார்ந்த முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம். அதன் மூலம் அவரைத் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வைத்து, இளைஞர்களின் ஆதரவைத் திரட்ட இபிஎஸ் வியூகம் வகுத்துள்ளார்.
அதிமுகவின் முகமாக எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன்குமார் முன்னிறுத்தப்பட்டால், “வாரிசு அரசியல்” என்ற ஆயுதத்தை ஏந்தித் திமுக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடுக்கப் போகும் கடுமையான விமர்சனக் கணைகளை அதிமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது? மற்றும் காலங்காலமாக வாரிசு அரசியலை வெறுத்து வந்த அதிமுக தொண்டர்கள் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வார்களா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
