ஆட்சியைப் பிடித்த கையோடு, நாள்தோறும் அதிரடி முடிவுகளை எடுத்து வரும் முதலமைச்சர் விஜய், தற்போது தனது இருப்பிடத்தை மாற்றும் மிக முக்கியமான முடிவொன்றை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தினசரி தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்வதில் நிலவும் பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக, விரைவில் சென்னை போயஸ் கார்டனுக்குக் குடிபெயர விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நீலாங்கரை டூ கோட்டை: செக்யூரிட்டி பிரஷர்
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, விஜய்யின் தினசரி பயணத் திட்டம் சென்னை காவல்துறையினருக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ஈசிஆர் பாதையில் நீலாங்கரையில் இருந்து தலைமைச் செயலகம் வரை தினமும் முதலமைச்சரின் ‘கான்வாய்’ செல்லும்போது, அந்த வழித்தடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தினமும் நீண்ட தூரம் பயணம் செய்வதும், மக்கள் கூட்டம் அவரைப் பார்க்கத் திரள்வதும் முதலமைச்சரின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. கோட்டையில் நடக்கும் அவசரக் கூட்டங்கள் மற்றும் அரசு சார்ந்த ஆலோசனைகளுக்குச் விரைவாகச் செல்ல முடியாத சூழலும் நிலவுகிறது.

போயஸ் கார்டனை லாக் செய்த ஆதவ் அர்ஜுனா
இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், விஜய்க்கு நெருக்கமான தவெக அமைச்சரும் முக்கியப் புள்ளியுமான ஆதவ் அர்ஜுனா களத்தில் இறங்கியுள்ளார். ஏற்கனவே ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகம் போயஸ் கார்டனில்தான் இயங்கி வருகிறது.
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள போயஸ் கார்டனில் இருந்து கோட்டைக்குச் செல்வது மிக எளிது என்பதாலும், விஐபி மண்டலம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகக் கச்சிதமாகச் செய்ய முடியும் என்பதாலும், அங்கேயே ஒரு கெத்தான பிரம்மாண்டமான இடத்தை ஆதவ் அர்ஜுனா தேர்வு செய்து வைத்துள்ளாராம். அந்த இடம் முதலமைச்சர் விஜய்க்குப் பிடித்துப்போகும் பட்சத்தில், உடனடியாக மாற்றத்திற்கான பணிகள் விரைவுபடுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

மீண்டும் திரும்பும் அரசியல் செல்வாக்கு
தமிழக அரசியலிலும், திரைத்துறையிலும் ‘போயஸ் கார்டன்’ என்பது வெறும் இடமல்ல; அது ஒரு அதிகாரத்தின் அடையாளம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அமைந்திருந்த போயஸ் கார்டன்தான் பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலின் முதன்மை அதிகார மையமாக விளங்கியது. திரைத்துறையின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக அங்குதான் வசித்து வருகிறார். சமீபத்தில்தான் நடிகர் தனுஷும் அங்குப் புதிய பிரம்மாண்ட வீட்டைக் கட்டிப் பால் காய்ச்சினார்.
தற்போது முதலமைச்சர் விஜய்யும் போயஸ் கார்டனுக்குக் குடிபெயர்ந்தால், மீண்டும் அந்தப் பகுதி தமிழகத்தின் அதிமுக்கிய அதிகாரப்பூர்வ மையமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
