கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஒரு அதிரடியான பரிசை வழங்கியுள்ளார். அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘சாண்டியர்’ படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ (முதல் பார்வை) போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பழிவாங்குதல் மற்றும் ரத்தம் குறித்த வாசகங்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளன.
‘சேதுபதி’, ‘சித்தா’, ‘வீர தீர சூரன்’ போன்ற படங்களை இயக்கிய எஸ்.யு. அருண் குமார் இப்படத்தை இயக்குகிறார். முன்னதாக ‘KH237’ என்று குறிப்பிடப்பட்டு வந்த இந்தப் படத்திற்கு, தற்போது ‘சாண்டியர்’ என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளது.
வெளியான போஸ்டரில், கமல்ஹாசன் மிகவும் தீவிரமான, ஆக்ரோஷமான தோற்றத்தில் காணப்படுகிறார். அவர் ஒரு காருக்கு அருகில் நிற்க, அவரது உடலில் ரத்தக்கறைகள் படிந்துள்ளன. அவரது இந்த மிரட்டலான தோற்றமும், பின்னணியில் உள்ள இருண்ட சூழலும், இப்படம் அதிரடி ஆக்ஷன், பழிவாங்கும் கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றன.
ஆனாலும், இந்தப் படம் வேறொரு காரணத்திற்காகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் தலைப்பை அறிவிப்பதற்கு முன்பாக, தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்தியில், “பழிவாங்குதலுக்கு ரத்தம்தான் தீர்வு” என்பது போன்ற கருத்து இடம்பெற்றிருந்தது. இது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி, இந்த விளம்பரச் செய்தியை விமர்சித்துள்ளார். வன்முறையைச் சிக்கல்களுக்கான தீர்வாகத் தொடர்ந்து திரைப்படங்கள் முன்வைப்பது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார். சமூகத்தில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்கனவே கவலைக்குரிய ஒன்றாக இருக்கும் சூழலில், இத்தகைய கருத்துகளைப் பரப்புவது பொறுப்பான செயலா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். படத்தின் முதல் ஃப்ர்ஸ் லுக்கே சர்ச்சையுடன் தொடங்கியுள்ளது.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, புகழ்பெற்ற சண்டைக் கலை இயக்குநர்களான ‘அன்பறிவு’ இப்படத்தில் பணியாற்றுகின்றனர். கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7-ஆம் தேதியையொட்டி, இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
