கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் பகுதியில், சமூக வலைத்தளங்களில் பணம் மற்றும் நகைகளை பகிரங்கமாகக் காட்டி வந்த தொழிலதிபரின் பூட்டிய வீட்டில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்த ஏலக்காய் வியாபாரியான வினோத் குமார் மற்றும் அவரது மனைவி மதுமிதா ஆகியோரது வீட்டிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மதுமிதா சமூக வலைத்தளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் தீவிரமாக இயங்கி வரும் பதிவர் ஆவார். சமீபகாலமாக அவர் மெத்தையில் கட்டுக் கட்டாக பணத்தைப் பரப்பி வைத்தும், கழுத்து நிறைய நகைகளை அணிந்தும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், தங்களது வீட்டில் இருக்கும் நகைகள் மற்றும் பணம் குறித்தும், மாதம் மாதம் தங்கம் வாங்குவது குறித்தும், எந்தக் கடையில் நகைகள் வாங்குகிறோம் என்பது குறித்தும் தொடர்ந்து வீடியோக்களைப் பகிர்ந்து வந்துள்ளார். சம்பவத்தன்று குடும்பத்தினர் எங்கு செல்கிறார்கள், எதற்காக வீட்டை விட்டு வெளியே செல்கிறார்கள், எப்போது புறப்படுகிறார்கள் என்பது உள்ளிட்ட தகவல்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் மற்றும் ஸ்டோரிகளாக பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டு ஒரு விசேஷ நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றுள்ளனர். அவர்கள் வீட்டைப் பூட்டிவிட்டு புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே, கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டை கட்டிங் மெஷின் மூலம் அறுத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 118 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும், சுமார் 120 சவரன் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
கொள்ளையர்கள் வீட்டில் இருந்த நகைகளை திருடிச் சென்றதுடன், போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் டிவிஆர் கருவியையும் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால், கொள்ளை தொடர்பான நேரடி வீடியோ ஆதாரங்கள் தொடக்கத்தில் போலீசாருக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டது.
வெளியூர் சென்றிருந்த குடும்பத்தினர் மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது, பின்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததையும், பீரோவில் இருந்த நகைகள் திருடப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
மதுமிதா சமூக வலைத்தளங்களில் பணம், நகைகள் உள்ளிட்ட தங்களது சொத்து விவரங்களை வெளிப்படையாகப் பதிவிட்டு வந்ததுடன், சம்பவத்தன்று குடும்பத்தினர் வெளியூர் செல்வது மற்றும் அவர்கள் வீட்டில் இல்லாத நேரம் குறித்த தகவல்களையும் பதிவிட்டிருந்ததால், அந்தத் தகவல்களை கொள்ளையர்கள் துல்லியமாகப் பின்தொடர்ந்து கொள்ளைக்குத் திட்டமிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொள்ளையர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்களா அல்லது மதுமிதாவின் இன்ஸ்டாகிராம் பதிவுகளைப் பார்த்து திட்டமிட்டு வந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அக்கம் பக்கத்து வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை விரைந்து பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
இதனிடையே, மதுமிதா சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்ததாகவும், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கும் உள்ளானது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதாகவும் குறிப்பிடப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் பணம், நகைகள், சொத்து விவரங்கள் மற்றும் குடும்பத்தினர் வெளியே செல்லும் நேரம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வெளிப்படையாகப் பகிர்வது எந்த அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு இந்த கொள்ளைச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
