Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தவுட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி மணியாரி. இவர்களுக்கு தாரணி என்ற 16 வயது மகள் உள்ளார். இவர் தற்போது 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவனுடன் பழகி வந்ததாக தெரிகிறது. பின்னர், அந்த மாணவனின் நடத்தை சரியில்லாத காரணத்தால், அந்த உறவைத் துண்டிக்க தாரணி முடிவு செய்து அவரை விலகியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கல்லூரி மாணவன், தொடர்ந்து மாணவிக்கு தொந்தரவு அளித்து வந்ததாகவும், மேலும் பெற்றோர்களுக்கும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து தன்னுடன் பழக வேண்டும் எனவும் வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி, இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். “தன்னை தொடர்ந்து தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டல் விடுத்து வருகிறார்கள். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அவர்கள்தான் காரணம்” எனவும் அவர் கூறி அழுதுள்ளார்.

பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி தாரணி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்தியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் இதுவரை விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும், சம்பந்தப்பட்ட மாணவனை கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பெற்றோர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு அளித்துள்ளனர்.

அப்போது, பெற்றோர் கண்ணீர் மல்க பேசுகையில், எங்கள் பிள்ளை நல்ல முறையில் படித்து வந்தாள். ஆனால் தொடர்ந்து தொந்தரவு மற்றும் மிரட்டல் காரணமாக உயிரிழந்துவிட்டாள். அவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். நீதியை வழங்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago