Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசுக்கு பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது 20 போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றங்கள் மட்டுமே செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், விதிமுறைகளின்படி அந்த எண்ணிக்கையை குறைந்தது 50 ஆக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூரமான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஒரு மாதத்திற்குள் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களைச் செய்ய நினைப்பவர்களுக்கு கடுமையான அச்சம் ஏற்படும் என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார்.

இதையும் படியுங்க  பிசிஆர் சட்டம் பழிவாங்கும் ஆயுதம்..! ஒரு நியாயம் வேண்டாமா..? டாக்டர் ராமதாஸ் ஆவேசம்..!

பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக பிரத்யேகமாக ஒரு பெண் காவல் துறை தலைமை இயக்குநர் (DGP) நியமிக்கப்பட வேண்டும் என்றும், அவரின் தலைமையில் தனி பிரிவொன்றை அமைத்து செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் தமிழக முதலமைச்சருக்கு ஆக்கப்பூர்வமான யோசனையை முன்வைத்துள்ளார்.

போக்குவரத்து உள்ளிட்ட துறைகளுக்கு தனித்தனி டிஜிபி பதவிகள் இருப்பதைப் போல, பெண்களின் பாதுகாப்பிற்கும் தனிப்பட்ட நிர்வாக அமைப்பு தேவை என அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், இளைய தலைமுறையை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து காப்பாற்றவும், போதைப்பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் நீதித்துறை, காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு அமைப்புகளில் விரைவான மற்றும் உறுதியான மாற்றங்கள் அவசியம் என சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago