பெண் பயணிகளின் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்திய ரயில்வே முக்கியமான சமூக நலத் திட்டம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, ரயில் நிலையங்களில் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, வடக்கு ரயில்வே மண்டலத்திற்குட்பட்ட 175 ரயில் நிலையங்களில் 500 இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
டெல்லி, லக்னோ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களின் ரயில் நிலையங்களில் இந்த வசதி தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பெண் பயணிகள் அவசரத் தேவையின் போது, எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இந்த இயந்திரங்கள் மூலம் சானிட்டரி நாப்கின்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
பெண்களின் கண்ணியம், சுகாதாரம் மற்றும் பயணத்தின் போது ஏற்படும் அவசரத் தேவைகளை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
முன்னதாக சென்னை உள்ளிட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டுமே இலவச சானிட்டரி நாப்கின் வசதி நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய ரயில்வே இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளதால், நாடு முழுவதும் ரயில்களில் பயணிக்கும் லட்சக்கணக்கான பெண் பயணிகள் இதன் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் முன்னிறுத்தும் இந்த முயற்சி, பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
