அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவி அன்பரசி, தனது குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வருவதாகக் கூறினார். பத்தாம் வகுப்பு படிக்கும் போது தனது தந்தை உயிரிழந்ததாகவும், அதன் பின்னர் தனது தாயார் பானிபூரி கடை நடத்தி குடும்பத்தை கஷ்டப்பட்டு வளர்த்ததாகவும் தெரிவித்தார். பொருளாதார வசதி இல்லாததால் எந்த தனியார் நீட் பயிற்சி மையத்திற்கும் செல்லாமல், வீட்டிலேயே படித்து 2026ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்றதாகக் கூறினார்.
புதுச்சேரி அரசின் 10 சதவீத அரசு பள்ளி மாணவர் இடஒதுக்கீடு திட்டம் போன்ற வாய்ப்புகள் இல்லையென்றால், தன்னைப் போன்ற ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது கனவாகவே இருந்து விடும் என்றும், இந்தத் திட்டம் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மருத்துவப் படிப்பை முடித்து ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை வழங்கும் மருத்துவராக உருவாக வேண்டும் என்பதே தனது இலட்சியம் என்றும் தெரிவித்தார்.
தனது தந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டபோது, சிகிச்சைக்குத் தேவையான பணத்தை செலுத்த முடியாத காரணத்தால் அவரை இழந்ததாகக் கூறிய அன்பரசி, இனி பணமின்மையால் யாரும் உயிரிழக்கக் கூடாது என்பதற்காகவே மருத்துவராக வேண்டும் என்ற கனவை மனதில் விதைத்துக் கொண்டதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.
அன்பரசியின் தாயார் கஸ்தூரி, பானிபூரி கடையின் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி, மகள்களை அரசுப் பள்ளியில் படிக்க வைத்ததாகக் கூறினார். தனது மகள் மருத்துவராகி சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தனது வாழ்நாள் கனவு என்றும், இந்த வாய்ப்பை வழங்கிய புதுச்சேரி அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
மற்றொரு மாணவி வி. கவிமாலினி, தந்தை பெயிண்டர் மற்றும் தாய் சமையல் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருவதாகக் கூறினார். சிறுவயதிலிருந்தே தனது மகளை மருத்துவராக்க வேண்டும் என்பது தாயின் கனவாக இருந்ததாகவும், உடல்நலப் பிரச்சினைகளைத் தாண்டி கடுமையாக உழைத்து மருத்துவப் படிப்பிற்குத் தகுதி பெற்றதாகவும் தெரிவித்தார். மருத்துவராகி முதலில் தனது தாயின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்றும், அதன் பிறகு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், புதுச்சேரி சென்டாக் பெற்றோர் மற்றும் மாணவர்கள் சங்கத் தலைவர் நாராயணசாமி, 2023ஆம் ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீடு பல ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார். இந்த இடஒதுக்கீட்டை உருவாக்கிய முதலமைச்சர் ரங்கசாமிக்கும், மாணவர்களை ஊக்குவித்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
மேலும், மருத்துவப் படிப்பில் சேரும் ஏழை மாணவர்களை நேரில் சென்று பாராட்டி, அவர்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து வருவதாகவும், இதுவரை 37 மாணவர்களின் மருத்துவக் கல்விக்கு உதவி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அரசு மட்டுமின்றி சமூகத்தில் வசதியுள்ளவர்களும் இதுபோன்ற மாணவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பொருளாதார வசதி இல்லாத குடும்பங்களில் இருந்து வந்தாலும், தன்னம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் புதுச்சேரி அரசின் 10 சதவீத அரசு பள்ளி மாணவர் இடஒதுக்கீட்டு திட்டத்தின் உதவியால் மருத்துவக் கல்வி என்ற கனவை நனவாக்கிய இந்த மாணவர்களின் வாழ்க்கைப் பயணம், பல மாணவர்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
