தமிழகத்தில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரை பயன்படுத்தும் அனைத்து குடும்பத்தினரும் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அறிவிப்பை மத்திய அரசும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டுள்ளன.
அதன்படி, அனைத்து வீட்டு உபயோக எல்பிஜி நுகர்வோர்களும் தங்களது கேஸ் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் e-KYC சரிபார்ப்பை வரும் ஆகஸ்ட் 16, 2026-க்குள் கட்டாயமாக நிறைவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் காலக்கெடுவிற்குள் e-KYC செய்யத் தவறினால், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் பயனாளிகள் மற்றும் மானியம் பெறும் சாதாரண எல்பிஜி நுகர்வோர்கள் பெறும் சமையல் எரிவாயு மானியம் தற்காலிகமாக நிறுத்தப்படலாம். மேலும், சில நிறுவனங்கள் மானியம் வழங்குவதை நிறுத்துவதுடன், சிலிண்டர் முன்பதிவு மற்றும் விநியோகத்திலும் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், e-KYC முடிக்காத நுகர்வோரின் வீட்டு உபயோக எரிவாயு இணைப்புகள் தற்காலிகமாக வணிகப் பயன்பாட்டு (Commercial) இணைப்பாக மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், தற்போது செலுத்தும் விலையை விட பல மடங்கு அதிகமாக, சுமார் ரூ.2,000 அல்லது அதற்கு மேல் செலுத்தி சிலிண்டர் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் போலி மற்றும் முறைகேடான கேஸ் இணைப்புகளை முற்றிலுமாக ஒழிப்பதும், ஒரே குடும்பத்தில் பல பெயர்களில் உள்ள இணைப்புகளை கண்டறிந்து தடுக்கவும், அரசின் மானியமும் நலத்திட்டங்களும் தகுதியான உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்வதுமாகும்.
e-KYC சரிபார்ப்பை நுகர்வோர் மிகவும் எளிதாக ஆன்லைனிலோ அல்லது நேரடியாகவோ செய்து முடிக்கலாம். ஆன்லைனில் செய்ய விரும்புவோர், தாங்கள் பயன்படுத்தும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியான IndianOil ONE, Hello BPCL அல்லது HP Pay செயலியை பதிவிறக்கம் செய்து, அதனுடன் மத்திய அரசின் Aadhaar FaceRD செயலியையும் நிறுவ வேண்டும். பின்னர் முக அடையாளச் சரிபார்ப்பு (Face Authentication) அல்லது OTP மூலம் சில நிமிடங்களிலேயே e-KYC-ஐ நிறைவு செய்யலாம்.
மேலும், உங்கள் வீட்டிற்கு சிலிண்டர் விநியோகம் செய்ய வரும் ஊழியர்களிடம் இருக்கும் பயோமெட்ரிக் கருவி அல்லது மொபைல் செயலி மூலமாகவும், ஆதார் எண்ணை வழங்கி கைரேகை அல்லது OTP சரிபார்ப்பின் மூலம் e-KYC-ஐ மேற்கொள்ளலாம்.
ஆன்லைன் வசதி இல்லாதவர்கள், தங்களது பகுதியில் உள்ள கேஸ் ஏஜென்சி அலுவலகத்திற்கு ஆதார் அட்டை மற்றும் கேஸ் இணைப்பு எண் அல்லது நுகர்வோர் புத்தகத்துடன் நேரில் சென்று கைரேகை பதிவு செய்து e-KYC-ஐ எளிதாக முடிக்கலாம். இந்த சேவைக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது; இது முற்றிலும் இலவசமான சேவையாகும்.
இதனிடையே, e-KYC பெயரில் சில மோசடி கும்பல்கள் பொதுமக்களை ஏமாற்ற முயற்சிக்கக்கூடும் என்பதால், யாரேனும் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள், OTP அல்லது தனிப்பட்ட தகவல்களைக் கேட்டால் எந்த சூழ்நிலையிலும் பகிர வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதிகாரப்பூர்வ இணையதளம், மொபைல் செயலி அல்லது அங்கீகரிக்கப்பட்ட கேஸ் ஏஜென்சி மூலமாக மட்டுமே e-KYC செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, கடைசி நேரம் வரை காத்திருக்காமல், உடனடியாக உங்கள் கேஸ் ஏஜென்சியைத் தொடர்புகொண்டு அல்லது அதிகாரப்பூர்வ ஆன்லைன் சேவைகள் மூலம் e-KYC நிலையைச் சரிபார்த்து, ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் கட்டாயம் சரிபார்ப்பை நிறைவு செய்து கொள்ளுமாறு அனைத்து எல்பிஜி நுகர்வோர்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
