தமிழக அரசியலில் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, இடதுசாரிக் கட்சிகள் தவெக அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெற்றால், ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பாமகவின் ஆதரவு தேவைப்படலாம் என்ற அரசியல் கணக்குகள் பேசப்படுகின்றன. இந்தச் சூழலை முன்கூட்டியே கணித்து பாமக தனது அரசியல் நகர்வுகளைத் தொடங்கியுள்ளதாகவும், அமைச்சரவையில் இரண்டு அமைச்சர் பதவிகளைக் கோரத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்ய தவெக தலைமை தயாராகி வருவதாகவும், ஐந்து அமைச்சர்கள் தொடர்பாக அதிருப்தி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
இடதுசாரிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றால்..
இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இடதுசாரிக் கட்சிகள் தவெக அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறக்கூடும் என்று கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழல் உருவானால், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொள்ள தவெக கூடுதல் ஆதரவைத் திரட்ட வேண்டிய நிலை ஏற்படலாம்.

இதைக் கணக்கில் கொண்டே பாமக தனது அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் சூழல் ஏற்பட்டால், அதற்குப் பதிலாக அமைச்சரவையில் இரண்டு இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது பாமகவின் கோரிக்கையாக இருக்கலாம்.
பாமகவுக்கு 2 அமைச்சர் பதவிகள்
தற்போதைய அரசியல் சூழலில் பாமகவுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படலாம். 2 எம்.எல்.ஏ-க்களை வைத்துள்ள விசிகவுக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுத்ததன் அடிப்படையில் 4 எம்.எல்.ஏ-க்களை கொண்டுள்ள தங்களுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் தேவை என பாமக தரப்பு வலியுறுத்தி வருகிறது.
தவெக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்
ஒருபுறம் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு குறித்த அரசியல் கணக்குகள் பேசப்படும் நிலையில், மறுபுறம் தவெக அமைச்சரவையிலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அமைச்சரவையில் யார் தொடர்வார்கள், யாருக்கு வாய்ப்பு குறையும் என்பது குறித்து சில அமைச்சர்களிடையே கவலை நிலவுகிறது. இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அமைச்சரவையை மறுசீரமைக்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளது.அதற்கான பட்டியல் தயாராகி வருகிறது.
குறிப்பாக, தங்களது செயல்பாடுகள் குறித்து தலைமை அதிருப்தியில் இருப்பதாகக் கருதப்படும் அமைச்சர்கள் மாற்றத்துக்கு உள்ளாகலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

‘ஹிட் லிஸ்டில்’ ஐந்து அமைச்சர்கள்
அமைச்சரவையில் மாற்றம் செய்யும் திட்டத்தில் ஐந்து அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் பட்டியலில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா முதலிடத்தில் இருப்பதாகவும், அவரைத் தொடர்ந்து அமைச்சர் முகமது பர்வேஸ், அமைச்சர் டி.கே. பிரபு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. களப்பணிகளில் போதிய ஈடுபாடு காட்டாதது, செயல்பாடுகள் குறித்த அதிருப்தி உள்ளிட்ட காரணங்களால் இந்த மாற்றங்கள் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கூடுதல் துறைகள் பறிக்கப்படுமா?
சில அமைச்சர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளைத் தங்களது பொறுப்பில் வைத்திருக்கும் நிலையில், அவர்களிடமிருந்து சில துறைகளைப் பிரித்து, புதிதாக அமைச்சரவையில் இடம்பெறுவோருக்கு ஒதுக்கவும் தலைமை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் உள்ள துறைகளில் ஒன்றை வேறொருவருக்கு ஒதுக்குவது குறித்தும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமைச்சர்களின் பொறுப்புகள் மறுசீரமைக்கப்படுவதுடன், நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தவும் தவெக தலைமை முயற்சி மேற்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
