Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 103 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடலூர் நாகேஷ் செட்டியார் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (70). இவர் ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பாசமலர். இவர்களுக்கு சரவணகுமார் என்ற மகன் உள்ளார். அவர் கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஆண்டு சரவணகுமாருக்கு சுகன்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சுகன்யா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால், மருமகளை பார்ப்பதற்காக வேலாயுதமும் அவரது மனைவி பாசமலரும் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி அமெரிக்கா சென்றிருந்தனர்.

புறப்படும் முன், தங்களது வீட்டை வேலாயுதத்தின் தம்பி மனைவி பூங்காவனத்திடம் ஒப்படைத்து, வீட்டுச் சாவியையும் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கூறியிருந்தனர்.

இதையும் படியுங்க  ஆளுநர் மாளிகை கொடுத்த நெருக்கடி.. அம்பலப்படுத்திய தவெக!

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் வீட்டிற்கு வந்த பூங்காவனம், வீட்டை சுத்தம் செய்து பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் இரவு 8 மணி அளவில் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க மின்விளக்கு அணைக்கப்பட்டிருந்ததையும், வீட்டுக்குள் ஏதோ உடைக்கும் சத்தம் கேட்டதையும் கவனித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அவர், அருகிலிருந்தவர்களை அழைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 103 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு காவல்துறையின் வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago