தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், டாஸ்மாக் நிதி முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் செந்தில் பாலாஜி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட 41 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் (FIR), முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முதன்மை குற்றச்சாட்டுக்குரிய நபராக சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன், டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குநர் எஸ். விசாகன், ஐஏஎஸ்., முன்னாள் மண்டல மேலாளர் ராம துரைமுருகன், செந்தில் பாலாஜியின் உதவியாளரும் திமுக நிர்வாகியுமான பாஸ்கர், ரதீஷ், ராஜ்மூலனூர் கார்த்திக் மற்றும் மேலும் சிலர் என மொத்தம் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FIR-ல் இடம்பெற்றுள்ள தகவலின்படி, 2021 முதல் 2025 வரை செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர்கள் ஒதுக்கப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
உரிமம் புதுப்பிக்கப்படாத பார்களை சட்டவிரோதமாக தொடர்ந்து செயல்பட அனுமதித்ததன் மூலமும், போக்குவரத்து ஒப்பந்தங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளின் மூலமும் அரசுக்கு ₹17.27 கோடி மற்றும் ₹13.58 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட அதிகமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மதுபானங்களுக்கு ₹500 வரையிலும், சாதாரண மதுபான பாட்டில்களுக்கு ₹10 முதல் ₹100 வரையிலும் கூடுதல் தொகை பொதுமக்களிடம் இருந்து சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டதாக FIR-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், பழைய மதுபான பாட்டில்கள் கொள்முதல், அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் பல கோடி ரூபாய் அளவிலான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கின் அடிப்படையில், கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு, அவரது உதவியாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளின் வீடுகள், டாஸ்மாக் மாவட்ட அலுவலகங்கள், KALS Distilleries, Golden Vats உள்ளிட்ட தனியார் மதுபான உற்பத்தி ஆலைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், ஏடிஎஸ்பி யுவராஜ் தலைமையிலான அதிகாரிகள் குழு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நேரில் விசாரணை நடத்தியது.

லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில், டாஸ்மாக் வருவாயிலிருந்து சுமார் ₹3,600 கோடி அரசியல் கட்சி நிதியாக சட்டவிரோதமாக திசைதிருப்பப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சில தனியார் மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கட்சி நிதி என்ற பெயரில் பெருமளவு பணம் பெறப்பட்டதாகவும் FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களது அறியப்பட்ட வருமானத்தை விட அதிக அளவில் சொத்துகளை குவித்துள்ளதாகவும் இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
விசாரணை முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மற்றும் விசாரணை நடத்தியதை உறுதிப்படுத்தினார். மேலும், அண்மையில் வெளியான குதிரை பேர விவகாரத்தில் தனது பெயரோ, தனது சகோதரர் அசோக் குமார் பெயரோ இல்லை என்றும், சட்டப்படி அனைத்து வழக்குகளையும் எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்தார்.
கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அவரது பூர்வீக வீட்டில் அவரது பெற்றோரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மதுபான ஆலைகளின் உற்பத்தி ஆவணங்கள், கொள்முதல் பதிவேடுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இதுவரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், தமிழகம் முழுவதும் நடைபெற்ற சோதனைகளின் முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
