Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

நீட் (NEET) தேர்வை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை தொடர்ந்து முன்வைத்து வரும் இயக்குநர் பா. ரஞ்சித், தனது ‘நீலம் பண்பாட்டு மையம்’ மற்றும் ‘நீலம் மாணவர் இயக்கம்’ ஆகியவற்றின் சார்பில் சென்னையில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று பல்வேறு கருத்துகளை வலியுறுத்தினார்.

ஜூலை 2026-இல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், நீட் தேர்வு சமூக நீதி, சமத்துவம் மற்றும் கல்வி உரிமைக்கு எதிரானதாக இருப்பதாகக் கூறினார்.

தலித் மாணவர்கள் இடஒதுக்கீட்டின் மூலம் குறைந்த மதிப்பெண்களுடன் மருத்துவக் கல்லூரிகளில் சேருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. ஆனால், நீட் தேர்வில் வெறும் 120 மதிப்பெண்கள் எடுத்தாலும், பணம் இருந்தால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிகிறது என்ற அநீதியை யாரும் கேள்வி கேட்பதில்லை என்று அவர் சாடினார்.

நீட் தேர்வு பொருளாதார ரீதியாகவும், வர்க்க அடிப்படையிலும் மிகப்பெரிய சமத்துவமின்மையை உருவாக்குகிறது. இது சமூக நீதிக்கு முற்றிலும் எதிரான கல்வி முறையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Republic Tamil

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நீட் தேர்வால் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறிய அவர், இதற்கு இளைஞர்களிடையே போதிய அரசியல் விழிப்புணர்வு இல்லாததே முக்கியக் காரணம் என்றார். தற்போதைய ‘ஜென் ஜி’ (Gen Z) தலைமுறையினரை அரசியல் விழிப்புணர்வுடன் செயல்படும் தலைமுறையாக உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

இதையும் படியுங்க  மோகன்லாலுக்கு டிஎன்ஏ டெஸ்ட்? 10 யானைத் தந்தங்கள்.. 46 கிலோ சிலைகள்.. அதிரடி விசாரணையில் கேரளா வனத்துறை!

டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதை அவர் கடுமையாகக் கண்டித்தார்.

Republic Tamil

“நீங்களும் நீட் எதிர்ப்பாளர்தானே? அப்படியிருக்கையில் நீட்டை எதிர்க்கும் தமிழக அரசு, போராடும் மாணவர்களை காவல்துறையைக் கொண்டு ஒடுக்குவது ஏன்?” என்று தமிழக முதலமைச்சரிடம் அவர் கேள்வி எழுப்பினார்.

மாணவர்கள் ஜனநாயக முறையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய அரசே ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்றும், மாணவர்களுடன் இணைந்து தாங்களும் தொடர்ந்து போராடத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியல் ரீதியாகவும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த பா. ரஞ்சித், தமிழக அமைச்சரவையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த எட்டு அமைச்சர்கள் இருந்தும், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து போதிய அழுத்தத்துடன் குரல் கொடுப்பதில்லை என்று குற்றம்சாட்டினார்.

Republic Tamil

“சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுவைத் தவிர, கடந்த இரண்டு மாதங்களாக மற்ற அமைச்சர்கள் யாரும் தலித் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசவில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் வரை அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதே பலருக்குத் தெரியாது” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சேலத்தில் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருக்கும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலையைக் கூட திறக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் விமர்சித்தார். இந்தப் போராட்டத்தை உடனடியாக நடத்துவதற்கான பின்னணியையும் பா. ரஞ்சித் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படியுங்க  "டெல்லிக்குக் கொடுத்த கெடு முடிந்தது… "எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் வருமா? அல்லது மீண்டும் ஒரு ஜந்தர் மந்தர் முற்றுகையா!

அகில இந்திய அளவில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், “நாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஏன் அமைதியாக இருக்கிறோம்?” என்று இயக்குநர் வெற்றிமாறன் எழுப்பிய கேள்வியும், மூத்த நடிகை ரேவதியின் ஆதங்கமும் இந்தப் போராட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்ற முடிவை எடுக்கத் தூண்டியதாக அவர் தெரிவித்தார்.

Republic Tamil

இந்தியக் கல்வி அமைப்பில் நீண்ட காலமாக நிலவி வரும் சாதி மற்றும் பொருளாதார சமத்துவமின்மையை ‘ஜெய் பீம்’ என்ற கோட்பாடே மிகத் தெளிவாகக் கேள்வி கேட்கிறது என்றும் அவர் கூறினார்.

சாதி, மத எல்லைகளைக் கடந்து அகில இந்திய அளவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நீட் தேர்வுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதைப் பார்க்கும்போது தனக்குப் புதிய நம்பிக்கை உருவாகிறது என்றும், “வாழ்க்கையில் முதன்முறையாக இந்த இளைஞர்களின் எழுச்சியைக் கண்டபோதுதான் நானும் ஒரு இந்தியன் என்ற உணர்வைப் பெறுகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Republic Tamil

நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டங்களை ஒடுக்கக் கூடாது என்று வலியுறுத்திய அவர், “எதற்காக மெரினா கடற்கரையை மூட வேண்டும்?” என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்க  ஹாலிவுட்டின் இரு ராணிகள் இணைகின்றனர்… ஏஞ்சலினா ஜோலியுடன் புதிய திட்டத்தை உறுதி செய்த பிரியங்கா சோப்ரா!

மேலும், “மக்களோடு இணைந்து நிற்கும் முதலமைச்சராக நீங்கள் இருக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். மாணவர்கள் அமைதியான முறையில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த அரசே ஒரு நிரந்தர இடத்தை ஒதுக்க வேண்டும்” என்றும் அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

போராட்ட மேடையில் தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்துகொண்ட பா. ரஞ்சித், சாதியக் கட்டமைப்பால் தான் எதிர்கொண்ட நிராகரிப்புகளையும் அதன் தாக்கங்களையும் விவரித்தார்.

கிராமப்புறங்கள், தலித் மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கனவுடன் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வரும்போது அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் அழுத்தம், அச்சம் மற்றும் பாதுகாப்பின்மையை நீட் தேர்வு போன்ற வடிகட்டல் முறைகள் மேலும் தீவிரப்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளாக நீட் எதிர்ப்பு போராட்டத்தை வலுப்படுத்த முடியாமல் போனதற்கு, தற்போதைய ஜென் ஜி தலைமுறையினருக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறியதே காரணம் என்றும் அவர் சுயவிமர்சனத்துடன் தெரிவித்தார்.

இதன் காரணமாக, புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘நீலம் மாணவர் இயக்கம்’ சார்பில் நடத்தப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ களப் போராட்டம் இதுவாகும் என்றும், இனிவரும் காலங்களில் மாணவர்களின் கல்வி உரிமைக்காக தொடர்ந்து களத்தில் போராடப் போவதாகவும் இயக்குநர் பா. ரஞ்சித் உறுதியளித்தார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago