கடந்த மார்ச் 10ஆம் தேதி தூத்துக்குடி அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் பிளஸ்2 மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் இரவில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளியாக தர்ம முனீஸ்வரன் என்பவருக்கு இரட்டை மரண தண்டனை விதித்து நீதிபதி பிரீதா தீர்ப்பளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் மொத்தம் 71 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், இரண்டு தடைவியல் அதிகாரிகளின் அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டுள்ளன. மார்ச் 10ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்திலிருந்து இன்று மே 25ஆம் தேதி வரை மொத்தம் 76 நாட்களில் விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இரவில் வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். ஆனால் அந்த புகார் அலட்சியமாக கையாளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் வனப்பகுதியில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குற்றவாளி தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் அடிப்படையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், மிக விரைவாக 76 நாட்களில் விசாரணையை முடித்து, குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இதேபோன்ற கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கிலும் விரைவான விசாரணை நடத்தி நீதியை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
