பெங்களூருவை சேர்ந்த சாதனா செட்டி, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்களை கொண்ட வளர்ந்து வரும் இன்ஃப்ளூயன்சராக அறியப்படுகிறார்.
ஃபேஷன், லைஃப்ஸ்டைல் மற்றும் அழகுக் கலை தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்த அவர், பல்வேறு உள்ளூர் பிராண்டுகள் மற்றும் அழகு நிலையங்களுக்காக விளம்பர மாடலாகவும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், பெங்களூரு ஜெயநகரில் அழகு நிலையம் நடத்தி வந்த கார்த்திக் புத்தா மற்றும் அவரது மனைவி ஹர்ஷிதா, தங்களது புதிய கிளினிக்கை சமூக ஊடகங்களில் பிரபலப்படுத்த சாதனா செட்டியை அணுகியுள்ளனர்.
ஆனால், சில நாட்களுக்கு முன்பு சாதனா செட்டி தன்னை “ஹனி ட்ராப்” செய்து, தனிப்பட்ட வீடியோக்களை காட்டி ஒன்றரை கோடி ரூபாய் பறிக்க முயன்றதாக கார்த்திக், ஜெயநகர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சாதனா செட்டியின் பெயருக்கும் சர்ச்சையை உருவாக்கியது.
இந்த நிலையில், சாதனா செட்டி போலீசாரிடம் சில ஆடியோ பதிவுகளை சமர்ப்பித்தார். அதில், கார்த்திக் தன்னை காதலிப்பதாக கூறி வற்புறுத்தியதும், தொடர்ந்து தொடர்பில் இருந்ததும் பதிவாகியிருந்தது. இதன் மூலம், கார்த்திக் கூறிய குற்றச்சாட்டில் சந்தேகம் எழுந்தது.
வழக்கில் மேலும் திருப்பமாக, கார்த்திக்கின் மனைவி ஹர்ஷிதா ஜெயநகர் காவல் நிலையத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், தனது கணவர் அளித்த “ஹனி ட்ராப்” புகார் முற்றிலும் பொய்யானது என்றும், சாதனாவை சிக்கவைக்கவே அவரது மொபைல் போனை திருடி போலி ஆதாரங்கள் உருவாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
விசாரணையில், கார்த்திக் தன்னை திருமணமாகாதவர் என கூறி சாதனாவுடன் பழகியதும், பின்னர் காதலிப்பதாக கூறி மாலத்தீவு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றதும் தெரியவந்துள்ளது. பின்னர், கார்த்திக்கிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும் குழந்தையும் இருப்பது தெரிய வந்ததால், சாதனா அதிர்ச்சி அடைந்து அவரது குடும்பத்தினரிடம் நேரடியாக விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சாதனா போலீசில் புகார் அளிப்பார் என்ற அச்சத்தில், கார்த்திக் தனது நண்பர்களின் உதவியுடன் சாதனாவின் மொபைல் போனை திருடி, அதிலிருந்த தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி போலி ஆதாரங்கள் உருவாக்கியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதுடன், கார்த்திக்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
