Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தையும் மொபைல் மூலம் ஒரே கிளிக்கில் ஆர்டர் செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், உங்கள் பார்சல் டெலிவரி செய்ய வேண்டிய முகவரி தவறாக உள்ளது அல்லது சிறிய அளவிலான ஷிப்பிங் கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே உங்கள் பார்சல் அனுப்பப்படும் என்ற வகையில் எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் செய்தி வந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஏனெனில், இதுவே தற்போது அதிகரித்து வரும் ஆபத்தான டெலிவரி மோசடிகளின் முக்கிய யுக்தியாகும். நாம் எப்போதும் ஏதாவது ஒரு பார்சலை எதிர்பார்த்து இருப்பதால், இத்தகைய செய்திகளை பார்த்தவுடன் யோசிக்காமல் அதில் உள்ள லிங்குகளை கிளிக் செய்து விடுகிறோம். அதுவே மிகப்பெரிய தவறாக மாறுகிறது.

இந்த மோசடி கும்பல்களின் முக்கிய ஆயுதம் அவசர உணர்வை உருவாக்குவதுதான். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் உங்கள் பார்சல் திருப்பி அனுப்பப்படும் என்ற எச்சரிக்கைகள் மூலம் மக்களை பதற்றமடையச் செய்து உடனடி முடிவெடுக்க தூண்டுகின்றனர்.

அந்த லிங்கை கிளிக் செய்தவுடன், அது அமேசான் அல்லது ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போல தோன்றும் போலி இணையப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு வங்கி தகவல்கள், ஓடிபி எண்கள் அல்லது தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்தால், சில நிமிடங்களிலேயே வங்கி கணக்கிலுள்ள பணம் முழுவதும் திருடப்பட வாய்ப்பு உள்ளது.

ஸ்மார்ட்போன் திரைகள் சிறியதாக இருப்பதால், போலி இணையதள முகவரிகள் அல்லது எழுத்துப் பிழைகளை உடனடியாக கண்டுபிடிப்பது பலருக்கும் சிரமமாக உள்ளது. மேலும், ஏற்கனவே கசிந்துள்ள பெயர் மற்றும் மொபைல் எண் போன்ற தகவல்களை பயன்படுத்துவதால், அந்த மெசேஜ்கள் மிகவும் நம்பகமானதாக தோன்றுகின்றன.

தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்துள்ள இந்த காலத்தில், விழிப்புணர்வே நமது பணத்தை பாதுகாக்கும் மிக முக்கியமான ஆயுதமாகும். தெரியாத எண்களில் இருந்து வரும் டெலிவரி லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி அல்லது இணையதளத்தில் சென்று உங்கள் ஆர்டர் நிலையை சரிபார்க்க வேண்டும்.

சௌகரியத்தை விட பாதுகாப்பே எப்போதும் முக்கியம்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago