ஓமன் கடற்கரை அருகே எம்.டி. எல் கையா என்ற வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளது. கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளில், 13 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன இந்தியர் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சம்பவத்தை மிகுந்த கவலைக்குரிய விஷயமாக வெளியுறவு அமைச்சகம் விவரித்துள்ளதுடன், அப்பகுதியில் வர்த்தகக் கப்பல்களையும் பொதுமக்களான மாலுமிகளையும் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறியுள்ளது. இந்தியத் தூதரகம் ஓமன் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன், நிவாரணம், மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது.
ஓமானில் உள்ள இந்தியத் தூதரகம் இந்த முழு நிகழ்வையும் கண்காணித்து வருவதாகவும், ஓமான் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியக் குடிமக்களை மீட்பதில் உதவியதற்காக ஓமன் அதிகாரிகளுக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் பதற்றத்தை உடனடியாகத் தணிக்கவும், பேச்சுவார்த்தை, ராஜதந்திரத்தின் மூலம் அமைதியை மீட்டெடுக்கவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. வர்த்தகக் கப்பல்கள், மாலுமிகள், பொதுமக்கள், பொது உள்கட்டமைப்புகளைக் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
