தனிப் பெரும் கட்சியாக 108 சீட்டுகளை பெற்றுள்ள தவெகவிற்கு, பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதனால் ஆட்சி அமைப்பதில் நெருக்கடிகளை சந்தித்த விஜய்க்கு, தற்போது திமுக கூட்டணியில் போட்டியிட்டு 5 எம்.எல்.ஏ.க்கள் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது. இந்த 5 சீட்டுகள் போதாது என்பதால் பெரும்பான்மைக்கான சீட்டுகளைப் பிடிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் விஜய்.
இது ஒருபுறம் இருக்க, விஜய் ஆட்சியில் பவர்ஃபுல் போஸ்டிங்கை கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது அவரது செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், திமுகவுக்கு நெருக்கமாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என பலரும் பல்வேறு வழிகளில் முயற்சி எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது அவரது செயலாளராக இருந்த விஜயக்குமார் ஐ.ஏ.எஸ்., எடப்பாடிக்கு நெருக்கமாக இருந்த சித்திக் ஐ.ஏ.எஸ் இருவரும் விஜய்யின் செக்ரட்டரிகளாக வருவதற்கு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

தங்களின் முயற்சி வெற்றி பெற்றிருப்பதாகவும் இவர்கள் சொல்லி வருகின்றனர். ஆனால், ‘ ‘இவர்கள் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இவர்களை நியமிப்பதன் மூலம், ஊழலற்ற ஆட்சி நடத்த நினைக்கும் விஜய்யின் நோக்கம் தடைபடும்” என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.
இதற்கிடையே, கடந்த திமுக ஆட்சியில் ஸ்டாலினிடமும், உதயநிதி ஸ்டாலினிடமும், ஸ்டாலினின் பெர்சனல் பி.ஏ. தினேஷிடமும் நெருக்கமாக இருந்த உதயச்சந்திரன், அமுதா, ககன்தீப்சிங் பேடி, தாரேஷ் அகமது, செந்தில்குமார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், விஜய்யின் தவெக ஆட்சியில் உயர் பதவியை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாகவும், இவர்களுக்காக மீடியேட்டர்கள் சிலர் விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படி திமுக, அதிமுக ஆட்சிகளில் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த இவர்களை விஜய்யும் தனது ஆட்சியில் உயர் பதவியில் உட்கார வைத்து அழகு பார்ப்பாரேயானால், அரசு நிர்வாகம் படு மோசமாகும். அது இந்த அதிகாரிகளை பாதிக்கப்போவதில்லை; விஜய்க்குத் தான் கெட்டபெயரை சம்பாதித்துக் கொடுக்கும் என்பதே தலைமைச் செயலக வட்டாரங்களில் எதிரொலிக்கும் ஹாட் டாபிக்.
