சமீபத்தில் வெளியான “ராம் அண்ட் லீலா” (Ram in Leela) திரைப்படத்தின் புரமோஷன் பணிகளுக்காக ரியோ ராஜ் அளித்த நேர்காணலில், கடந்த ஆண்டு வெளியான “ஆண் பாவம் பொல்லாதது” (Aan Paavam Pollathathu) படத்துக்கு பெண்ணியவாதிகள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ரியோ ராஜ், “நாங்கள் பெண்ணியவாதிகளை விமர்சிக்கவில்லை. பெண்ணியம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதைப் பேசுபவர்களைப் பற்றித்தான் அந்தப் படத்தில் பேசியிருக்கிறோம்” என்றார். மேலும், “பெண்ணியம் என்பது ஒரு உணர்வு (Feminism is a feeling). என் அம்மா பெண்ணியம் பற்றிப் பேசியதே இல்லை; ஆனால் அதை வாழ்ந்து காட்டியிருக்கிறார். தந்தை இல்லாமல் எங்களை வளர்த்த அவர் தான் உண்மையான தைரியமான பெண்” என்று தனது தாயின் வாழ்க்கையை உதாரணமாகக் குறிப்பிட்டார்.
ரியோ ராஜின் “பெண்ணியம் என்பது ஒரு உணர்வு” என்ற கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பெண்ணியம் என்பது பெண்களின் உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான கொள்கையும் போராட்டமுமாகும்;
அதை வெறும் “உணர்வு” என்று சுருக்குவது தவறு என ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். அதேநேரம், தனது தாயின் உழைப்பையும் தியாகத்தையும் பெருமையாகப் பேசியதில் தவறில்லை என்றும், போலி பெண்ணியவாதிகள் குறித்து அவர் கூறிய கருத்துகளில் நியாயம் இருப்பதாகவும் மற்றொரு தரப்பினர் ரியோ ராஜுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவரை விமர்சிக்கும் சிலர் “அல்ட்ரா கிரிஞ்ச்” (Ultra Cringe) என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்தின் கருத்து

தனது முந்தைய படத்தை நியாயப்படுத்திப் பேசிய ரியோ ராஜ், கணவன்-மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு, பெண் காவல் நிலையம் சென்றால், உடனடியாக ஆண் குற்றவாளியாகவும், பெண் பாதிக்கப்பட்டவராகவும் பார்க்கப்படுவதாகக் கூறினார். இந்த ஒருதலைப்பட்சமான பார்வையைத்தான் படம் கேள்வி கேட்பதாகவும், குடும்பப் பிரச்சினைகளால் ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் சொல்லவே பெண் கதாபாத்திரத்தில் சில தவறுகள் இருப்பதுபோல் காட்டியதாகவும் விளக்கமளித்தார்.
“இன்றைய காலகட்டத்தில் பெண்ணியம் பேசப்படுவதால் குடும்பங்கள் உடைகின்றனவா?” என்ற கேள்விக்கு, “ஆம், குடும்பங்கள் உடைகின்றன” என்று அவர் பதிலளித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு பெண் தான் எடுத்த முடிவில் உறுதியாக நிற்பதே பெண்ணியம் என்றும், அதைத் தவறாகப் புரிந்துகொண்டு சிலர் செயல்படுவதால்தான் விவாகரத்துகள் அதிகரிப்பதாகவும் அவர் கூறினார்.
‘என் அம்மா சிங்கிள் மதர் கிடையாது’
தனது தந்தை ஆதரவின்றி தாய் தங்களை வளர்த்ததாகக் கூறிய ரியோ ராஜ், “ஆனால் அவர் ஒரு சிங்கிள் மதர் கிடையாது” என்றும் குறிப்பிட்டார். இதற்கு நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தந்தை தனது பொறுப்புகளில் இருந்து விலகிய பிறகும், தாய் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்ப்பதை ஏன் சமூகம் பெருமையாகவும் தியாகமாகவும் பார்க்க வேண்டும் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். தந்தையின் பொறுப்பற்ற செயல்பாட்டை விடுத்து, கஷ்டப்பட்ட தாயை ‘பெண்ணியவாதி’ எனக் கொண்டாடுவது ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடு என்றும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.
“ஆண் பாவம் பொல்லாதது” படம் ஓடிடியில் வெளியானபோதும், பெண்களைத் தரம் தாழ்த்துவதாகவும், ஆண்களுக்கு மட்டுமே ஆதரவாகப் பேசுவதாகவும், ‘இன்செல்’ ரசிகர்களைக் கவரும் படமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. தற்போது ரியோவின் புதிய கருத்துகள் அந்தப் பழைய விவாதத்தையும் மீண்டும் கிளப்பியுள்ளன. இதனால் எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் வீடியோக்கள் மற்றும் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.
‘என் திறமை வீணடிக்கப்படுகிறது’ – ரியோ ராஜ்
மற்றொரு நேர்காணலில், “நீங்கள் ஏன் சொந்தமாகப் படம் தயாரிக்கத் தொடங்கினீர்கள்?” என்று கேட்கப்பட்டபோது, “வெளியில் என் திறமையைச் சரியாகப் பயன்படுத்தாமல் வீணடிக்கிறார்கள் என்று தோன்றியது. அதனால் தான் நானே தயாரிப்பில் இறங்கினேன்” என்று ரியோ ராஜ் கூறினார்.
“ஆண் பாவம் பொல்லாதது” படத்துக்கு எழுந்த விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், சில படங்கள் திரையரங்குகளில் வெளியானபோது கொண்டாடப்படாமல் போனாலும், பின்னர் மக்கள் தேடிப் பார்த்துப் பாராட்டுவார்கள் என்றார். இதற்கு செல்வராகவனின் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், தனது படமும் எதிர்காலத்தில் தியேட்டரில் தவறவிட்ட தம்பதிகளால் தேடிப் பார்க்கப்பட்டு நல்ல விவாதத்தை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, “ராம் அண்ட் லீலா” படத்தின் டிரைலரைப் பார்த்த சிலர் “இவன்லாம் ஒரு ஹீரோவா?” என்று கமெண்ட் செய்வதாக ரியோ ராஜ் நகைச்சுவையாகப் பகிர்ந்துள்ளார். விமர்சனங்களை எளிதாக எடுத்துக்கொண்டு நகைச்சுவையாக மாற்றிய அவரது அணுகுமுறை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும், ரியோ ராஜ் நிஜ வாழ்க்கையில் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ்ந்தாலும், சினிமாவில் ‘இன்செல்’ ரசிகர்களைக் கவர இதுபோன்ற கருத்துகளைப் பேசி படத்துக்கு விளம்பரம் தேடுவதாகவும் சிலர் புதிய விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.
சர்ச்சைகளுக்கு மத்தியில், தனது மகள் தன் மீது வைத்திருக்கும் அதீத பாசம் மற்றும் பொசசிவ்னஸ் குறித்துப் பேசிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. தந்தை-மகள் பாசத்தை வெளிப்படுத்தும் அந்தக் காட்சி, தற்போதைய விவாதங்களுக்கு மத்தியில் நேர்மறையான கவனத்தைப் பெற்றுள்ளது.
ஒட்டுமொத்தமாக, ஒரே புரமோஷன் பயணத்தில் ரியோ ராஜ் கடுமையான விமர்சனங்களையும், அதே நேரத்தில் தனது வெளிப்படையான மற்றும் எதார்த்தமான பேச்சுக்காகப் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். குறிப்பாக, “பெண்ணியம் என்பது ஒரு உணர்வு” என்ற அவரது கருத்துதான் தற்போது சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதமாக மாறியுள்ளது.
