தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்.எல்.ஏ.க்களின் கட்சி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டியுள்ளார்.
தவெக அரசின் அமைச்சரான அருண்ராஜ் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளார். அருணராஜ் வந்து சென்றவுடன் இந்த நீக்கம் நடைபெற்றுள்ளது. கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படாமல், த.வெ.க-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சிப் பதவிகளைப் பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
த.வெ.க-வுக்கு ஆதரவு அளித்த மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் கட்சிப் பதவிகள் அனைத்தையும் பறிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன் மூலம் அவர் உணர்த்தியுள்ளார்.
கட்சியின் முக்கியத் தலைவர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் எடப்பாடிக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த நீக்க நடவடிக்கை அ.தி.மு.க-வை இரண்டாகப் பிளவுபடுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது. த.வெ.க அரசுக்கு ஆதரவளிப்பதன் மூலம் அ.தி.மு.க-வின் ஒரு பிரிவினர் எடப்பாடியின் தலைமையைத் தகர்க்க முயல்வதாகவும், அதற்குப் பதிலடியாகவே இந்த நீக்கம் அமைந்துள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
