இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களில் தற்போது பெரிய அளவில் கட்டமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI), ஆட்டோமேஷன் மற்றும் ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், புதிய பணியாளர்களைச் சேர்ப்பது குறைக்கப்பட்டு வருவதுடன், அனுபவமிக்க ஊழியர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு வருகிறது.
இதனால் இந்திய ஐடி துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், ஐடி துறையில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கும் எதிர்காலம் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.
உலகளாவிய பொருளாதார மந்தநிலை, வாடிக்கையாளர் நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பச் செலவுகளை குறைப்பது மற்றும் செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சி ஆகியவை இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன.
குறிப்பாக, இதுவரை மனிதர்கள் செய்து வந்த பல வழக்கமான பணிகளை தற்போது ஜெனரேட்டிவ் AI மற்றும் AI ஏஜென்ட்கள் குறைந்த நேரத்தில் செய்து முடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை நம்பியிருந்த பாரம்பரிய ஐடி சேவை முறை மாறி வருகிறது.

இதன் தாக்கம் முன்னணி ஐடி நிறுவனங்களிலும் வெளிப்படத் தொடங்கியுள்ளது. கடந்த நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு சுமார் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியிலிருந்து விலகியுள்ளனர் அல்லது நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களிலும் புதிய பணியாளர்களைத் தேர்வு செய்வது குறைக்கப்பட்டுள்ளதுடன், ஊழியர்களைக் குறைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மிடில் மற்றும் சீனியர் மேனேஜ்மென்ட் நிலையில் பணியாற்றும் ஊழியர்களும் இதன் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
முன்பு புதிய திட்டங்கள் வருவதற்கான எதிர்பார்ப்பில், நிறுவனங்கள் தங்களது பணியாளர்களில் ஒரு பகுதியினரை ‘பெஞ்ச்’ எனப்படும் உடனடி திட்டப்பணி இல்லாத நிலையில் வைத்திருப்பது வழக்கமாக இருந்தது. சில நிறுவனங்களில் 20 முதல் 30 சதவீதம் வரை ஊழியர்கள் பெஞ்சில் இருப்பதும் இருந்துள்ளது.
ஆனால், தற்போதைய சூழலில் பெஞ்ச் பணியாளர்களின் எண்ணிக்கையை சுமார் 8 முதல் 10 சதவீதம் வரை குறைக்க நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. அதுமட்டுமின்றி, ஊழியர்கள் பெஞ்சில் இருக்கும் கால அளவும் முன்பு இருந்த 45 முதல் 60 நாட்களில் இருந்து 30 முதல் 45 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காலத்திற்குள் புதிய திட்டப்பணி கிடைக்காத ஊழியர்கள் மீது பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. இதனால், வேலை பாதுகாப்பு குறித்து ஐடி ஊழியர்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்திய ஐடி நிறுவனங்களின் முக்கிய வெளிநாட்டு சந்தைகளிலும் பொருளாதார மந்தநிலை காணப்படுகிறது. குறிப்பாக பிரிட்டன் சந்தையில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் புதிய பணியாளர்களை சேர்ப்பதை குறைத்து வருகின்றன.
பிரிட்டனில் ஏற்படும் பொருளாதாரச் சரிவு இந்திய ஐடி நிறுவனங்களையும் நேரடியாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் எச்எல்எல் போன்ற முன்னணி இந்திய ஐடி நிறுவனங்களின் வருவாயில் பிரிட்டன் சந்தையும் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த சந்தையில் புதிய தொழில்நுட்பத் திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டாலோ அல்லது வாடிக்கையாளர்கள் தங்களது ஐடி செலவுகளை குறைத்தாலோ, இந்திய நிறுவனங்களுக்கு கிடைக்கும் புதிய ஒப்பந்தங்களும் வருவாயும் பாதிக்கப்படலாம்.
இதன் விளைவாக, புதிய பட்டதாரிகளை அதிக அளவில் வேலைக்கு எடுப்பது, ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது போன்ற நடவடிக்கைகளிலும் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும். இதன் தாக்கம் ஐடி துறையைத் தாண்டி, வங்கி, ஜவுளி, ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் எதிரொலிக்கும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒருபுறம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் சாதகமாக இருந்தாலும், நடைமுறையில் படித்த இளைஞர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. வேலை கிடைத்தாலும், எதிர்பார்த்த அளவிலான ஊதியம் கிடைக்காத சூழலும் பலருக்கு உள்ளது.
அதே நேரத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் தங்களது அன்றாட செலவுகளை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களில் இருசக்கர வாகனங்கள் முதல் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் வரை பல்வேறு பொருட்களின் விற்பனை மந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், ஜிஎஸ்டி நடைமுறைகள், கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட காரணங்களால் ஏராளமான சிறு மற்றும் குறு நிறுவனங்களும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. பருவநிலை மாற்றம் மற்றும் வறட்சி போன்ற காரணங்களால் விவசாயத் துறையும் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது.
இவ்வாறு சர்வதேச சந்தையில், குறிப்பாக பிரிட்டனில் நிலவும் பொருளாதார மந்தநிலையும், இந்தியாவின் உள்நாட்டில் நிலவும் பொருளாதார சவால்களும் ஒன்றாக இணைந்துள்ள நிலையில், இந்திய ஐடி துறை முக்கியமான மாற்றக் கட்டத்தை எதிர்கொண்டு வருகிறது.
இருப்பினும், அனைத்து ஐடி வேலைவாய்ப்புகளும் ஆபத்தில் உள்ளன என்று கூற முடியாது. AI, கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி, பிளாட்ஃபார்ம் இன்ஜினியரிங் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களில் திறன் பெற்ற பணியாளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.
எனவே, பாரம்பரிய ஐடி பணிகளில் மட்டுமே நம்பிக்கை வைக்காமல், புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்வது ஊழியர்களுக்கும், வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கும் முக்கியமானதாக மாறியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு பல வழக்கமான பணிகளை மாற்றியமைத்து வரும் நிலையில், வரும் காலங்களில் திறன் மேம்பாடு, வேலை பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் திட்டமிடல் ஆகியவற்றில் ஐடி ஊழியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
