Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

poongundranpoongundran

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். அப்படி இருந்த போதிலும் அதிமுக குறித்தும், அக்கட்சியில் உள்ள நிர்வாகிகள் குறித்தும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் குறித்து பூங்குன்றன் சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், அரசியல் களத்தில் பல தசாப்த கால அனுபவமும், கூர்மையான அறிவும், அசாத்தியமான நிர்வாகத் திறனும் கொண்ட ஆளுமை ஜே.சி.டி. பிரபாகரன் அவர்கள். இன்று அவர் வகிக்கும் சபாநாயகர் பதவி என்பது தற்செயலாகக் கிடைத்ததல்ல. பல ஆண்டுகால உழைப்பு, அனுபவம், அறிவு, நிர்வாகத் திறன் மற்றும் நடுநிலையான செயல்பாடுகளுக்குக் கிடைத்த அங்கீகாரம்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ‘அம்மா’ அவர்களின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஒரு கிறிஸ்துமஸ் விழா ஏற்பாட்டின்போது எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. விழாவைச் சிறப்பாகவும், குறிப்பிட்ட நேரத்திற்குள்ளும் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் அம்மா அவர்கள் மிகவும் உறுதியாக இருந்தார். அப்போது என்னிடம் பேசிய அம்மா அவர்கள், “நீ ஜே.சி.டி. பிரபாகரன் அவர்களை அழைத்து நான் சொல்வதைச் சொல். அவர் அதை அற்புதமாகச் செய்து முடிப்பார். அவர் மிகவும் நுணுக்கமானவர்; அறிவானவர்” என்று பிரபாகரன் அவர்களின் திறமையைப் பாராட்டிக் கூறினார்.

இதையும் படியுங்க  சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யின் திடீர் இருக்கை மாற்றம்: தற்செயலானதா அல்லது ஜோதிடரின் 'வாஸ்து' ஆலோசனையா?

ஒரு தலைமை, தனது தொண்டர்களிடம் இருக்கும் திறமையை எவ்வளவு நுணுக்கமாகக் கவனித்து வைத்திருக்கிறது என்பதற்கு அந்த வார்த்தைகளே சாட்சி. அம்மா அவர்கள் சொன்னதைப் பிரபாகரன் அவர்களிடம் தெரிவித்தபோது, அவர் வழக்கமான இயல்புடன், “நீங்க கவலையை விடுங்க… நான் பாத்துக்கறேன்!” என்று பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அந்த விழா எந்தக் குறையும் இல்லாமல் சிறப்பாக நடைபெற, அம்மா அவர்களும் அவரது பணியை மனதாரப் பாராட்டினார்.

அவருடன் பழகிய காலங்களில் அவர் என்மீது காட்டிய அன்பும், பண்பும், எளிமையும், வழங்கிய தொழில் மற்றும் வாழ்வியல் வழிகாட்டுதல்களும் என்றும் மறக்க முடியாதவை. அன்றைக்கு அவருடைய ஆளுமையின் முழுப் பரிமாணத்தையும் நான் முழுவதும் உணர்ந்திருக்கவில்லை. ஆனால், இன்று சட்டமன்றத்தில் அவர் செயல்படும் விதத்தைப் பார்க்கும்போது, அம்மா அவர்கள் அன்றே அவரிடம் கண்ட அந்த அறிவையும் நுணுக்கத்தையும் இன்று முழு தமிழகமும் காண்கிறது என்ற உணர்வு ஏற்படுகிறது.

பல புதிய உறுப்பினர்களைக் கொண்டுள்ள இன்றைய சட்டமன்றத்தை அவர் வழிநடத்தும் விதம் பாராட்டுக்குரியது. தான் சார்ந்த கட்சியை எந்த சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல் காப்பாற்றுவது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி—தவறு என்றால் கண்டிப்பது; உரிய நேரத்தில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்குவது; அவையின் மாண்பைக் காப்பது; தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு வழிவகுப்பது என, ஒரு சபாநாயகருக்குத் தேவையான பண்புகளைத் தனது செயல்பாட்டின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படியுங்க  திமுக, அதிமுக சகாப்தம் க்ளோஸ்..!? தமிழ்நாட்டின் ‘பாகுபலி’ யார்? விஜய்யை வீழ்த்துமா அண்ணாமலையின் ‘சிங்கப்’ பாதை..?

இவரை சபாநாயகராக நியமித்த போது எனக்கு மிகுந்த வருத்தம். காரணம் இவர் அமைச்சராக பொறுப்பேற்று இருந்தால் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் புரட்சித்தலைவர் வழியில் கிடைத்திருக்குமே என்று நினைத்தேன். ஆனால், தவெக தலைவர் விஜய் அவர்கள் எந்தத் தொலைநோக்குப் பார்வையுடன் இவரை இந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்தார் என்பது இன்று புரிகிறது. புதிய உறுப்பினர்கள் அதிகம் நிறைந்த இந்த அவையை, அனுபவமும் அறிவும் கொண்ட இவரைப் போன்ற ஒருவரால் மட்டுமே இவ்வளவு கட்டுப்பாட்டுடனும், அதே நேரத்தில் கனிவுடனும் வழிநடத்த முடியும்.

ஒரு கண்டிப்பான ஆசிரியராகவும், கனிவான குருவாகவும் அவர் அவையை நெறிப்படுத்தும் விதம் உண்மையிலேயே பெருமிதம் கொள்ளச் செய்கிறது. சட்டசபை நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்கிறது. அன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கூர்மையான அறிவாளி என்று அடையாளம் காணப்பட்டவர்… இன்று முதலமைச்சர் விஜய் அவர்களின் நம்பிக்கையுடன் தமிழக சட்டமன்றத்தின் அவைத் தலைவராக அமர்ந்து, தனது அனுபவத்தாலும் அறிவாலும் அந்தப் பொறுப்புக்கு பெருமை சேர்த்து வருகிறார். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் அவர்களின் இந்தப் பயணம் இன்னும் பல வரலாற்றுச் சாதனைகளைப் படைக்கட்டும்! அவரது அறிவும் அனுபவமும் அவையின் மாண்பை மேலும் உயர்த்தட்டும்! மக்களுக்கான நல்லாட்சி நெறிகள் சட்டமன்றத்தில் தொடர்ந்து நிலைபெறட்டும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  "மைக்கை பிடிச்சாலே மாஸ் தான்… காலையிலேயே தமிழகத்திற்கு CM விஜய் கொடுத்த 'குட்டி ஸ்டோரி' மெசேஜ்!
Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago