சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமான ஜூன் 26-ஐ முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி வாசிக்கப்பட்டது.
உறுதிமொழியில்,
“போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்.
போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக வழங்குவேன். போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம், தமிழ்நாட்டிலிருந்து போதைப்பொருட்களை வேரறுக்க மாநில அரசுடன் எப்போதும் இணைந்து செயல்படுவேன்.
மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதியளிக்கிறேன்.” என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் “Start Run, Stop Drugs” என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
மேலும், மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்கி வைப்பதற்கு முன்பு, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வுப் பலகையில் முதலமைச்சர் தனது முதல் கையெழுத்தை பதிவு செய்து, விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.
போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
