Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Supreme Court

தேனி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 19, 2026) மீண்டும் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு, பல தலைமுறைகளாக மேகமலை மற்றும் அதன் சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் வசித்து வரும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

மேகமலை வனப்பகுதியில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத இலவம் பஞ்சு தோட்டங்கள், தனியார் சொகுசு விடுதிகள் மற்றும் பிற வணிகக் கட்டமைப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வனப்பகுதிக்குள் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள அரசு மற்றும் பொது பயன்பாட்டுக் கட்டிடங்களை 6 மாதங்களுக்குள் இடமாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட காப்புக்காடு மற்றும் புலிகள் காப்பகப் பகுதிகளில் இனி யாருக்கும் புதிய பட்டா வழங்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால், மத்திய உயர்மட்டக் குழுவின் பரிந்துரைப்படி துணை ராணுவப் படையின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

இதையும் படியுங்க  "சோழர் கால தங்கத் தட்டு... தொட்ட உடனே ₹40 லட்சம் அவுட்டு!" – திண்டுக்கல்லில் அரங்கேறிய சினிமா பாணி ‘இருடியம்’ மோசடி!

இந்த உத்தரவின் காரணமாக மேகமலை, வருஷநாடு, கண்டமனூர், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பல தலைமுறைகளாக இப்பகுதிகளில் வசித்து வரும் தங்களை வெறும் ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கருதி வெளியேற்றக் கூடாது என்று மலைக்கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Republic Tamil

உச்சநீதிமன்றம் நியமித்த மத்திய உயர்மட்டக் குழுவான CEC சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, வருஷநாடு, மேகமலை, கண்டமனூர் மற்றும் சின்னமனூர் வனச்சரகங்களில் சுமார் 5,072 ஹெக்டேர், அதாவது 12,500 ஏக்கர் அளவிலான வனப்பகுதி ஆக்கிரமிப்பில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், மொத்தம் 4,601 பேர் ஆக்கிரமிப்பாளர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பல தலைமுறைகளாக இலவம் பஞ்சு, ஏலக்காய், மொச்சை உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்து வரும் சிறு விவசாயிகள் மற்றும் மலைப்பகுதி மக்கள் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, வனப்பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததாக 118 தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறை ரீதியான மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களிடமிருந்து சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்க  "வண்ணாரப்பேட்டையில் நள்ளிரவு பயங்கரம்: சரித்திர பதிவேடு ரவுடி ‘பலி ஆடு’ அஜய் சரமாரி வெட்டிக்கொலை!"
Republic Tamil

வனப்பகுதிக்குள் உரிய அனுமதியின்றி 116 அரசு மற்றும் பொதுப் பயன்பாட்டுக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட கட்டிடங்களும் அடங்கும்.

அரசே வனப்பகுதிக்குள் பள்ளிகள் மற்றும் ரேஷன் கடைகள் போன்ற கட்டிடங்களை அமைத்ததன் மூலம், அங்கு ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளுக்கு ஒரு வகையில் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியதுபோல் சூழலை உருவாக்கியுள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே மக்கள் அந்தப் பகுதிகளில் இருந்து தாமாக வெளியேறாமல் இருப்பதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், தேனி மாவட்டத்தின் கடமலை–மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 98 கிராமங்களைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட மக்கள், தங்களை வெளியேற்றக் கூடாது எனக் கோரி கடையடைப்பு மற்றும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுபுறம், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வெள்ளிமலை, பொம்மராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில தனியார் எஸ்டேட் உரிமையாளர்கள் தங்களுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வனத்துறையிடம் தாமாக முன்வந்து ஒப்படைக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு மரங்கள் மற்றும் பயிர்களுக்கான இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  ''மழை வர்றப்போ யாருக்கும் தெரியாம திறந்துடுங்க..!'' அம்பேத்கர் சிலை விவகாரத்தில் அரசு அதிகாரிகளா..?அதிர வைக்கும் ஆடியோ லீக்..!

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்திலும் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது. மேகமலை பகுதி 2009ஆம் ஆண்டு காப்புக்காடாகவும், 2021ஆம் ஆண்டு புலிகள் காப்பகமாகவும் மாற்றப்பட்டபோது, அங்கு நீண்ட காலமாக வசித்து வந்த தகுதியுடைய மக்களுக்கு உரிய உரிமைகள் மற்றும் பட்டாக்களைப் பெற்றுத்தர முந்தைய அரசுகள் தவறிவிட்டதாக தற்போதைய தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.

மலைப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ர. நிர்மல்குமார் தலைமையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்குமா அல்லது ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமா என்பது அடுத்தகட்ட விசாரணையில் தெரியவரும். இதனால் மேகமலை மற்றும் வருஷநாடு பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மலைக்கிராம மக்களிடையே தொடர்ந்து பதற்றமும் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago