Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Chola-Era Gold Plate

திண்டுக்கல் மாவட்டத்தில், “மாமன்னர் ராஜராஜ சோழன் சாப்பிட்ட தட்டு” எனக் கூறி, ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் சினிமா பாணியில் ரூ.40 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“மாமன்னர் ராஜராஜ சோழன் சாப்பிட்ட, ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கத் தட்டும், அதிசய இருடியமும் (Iridium) எங்களிடம் உள்ளது. இதனை வாங்கி வீட்டில் வைத்தால் யோகம் கொட்டும், கோடீஸ்வரராகலாம்” எனக் கூறி மோசடிக் கும்பல் தொழிலதிபரை நம்ப வைத்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரைத் தொடர்புகொண்ட அந்தக் கும்பல், தங்களிடம் பழங்காலத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் அரிய தங்கத் தட்டு இருப்பதாகவும், சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ.2 கோடிக்கும் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது தங்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதால், ரூ.40 லட்சம் அட்வான்ஸ் தொகையை வழங்கினால் தட்டைக் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

வெறும் தட்டு என்று கூறினால் நம்பமாட்டார் என்பதால், அதில் அதிசய சக்தி கொண்ட இருடியம் கலந்திருப்பதாகவும், அதை வீட்டில் வைத்தால் காந்த சக்தியைப் போல பணத்தை ஈர்க்கும் என்றும், குடும்பத்திற்கு யோகம் கொட்டுவதுடன் ஒரே நாளில் சர்வதேச அளவில் பெரும் கோடீஸ்வரராகிவிடலாம் என்றும் அடுக்கடுக்காக ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர்.

இதையும் படியுங்க  நிமிட இடைவெளியில் பிரிந்த இரு உயிர்கள்… வத்தலகுண்டை உலுக்கிய நிஜக் காதல் கதை!

மேலும், சாதாரண தட்டுக்கு ரசாயனப் பூச்சுகள் மூலம் பளபளப்பான தோற்றத்தை ஏற்படுத்தி, அது மாமன்னர் ராஜராஜ சோழன் பயன்படுத்திய ரூ.2 கோடி மதிப்புள்ள அரிய வகை தங்கத் தட்டு என நம்ப வைத்துள்ளனர். இதற்கு ஆதாரமாக சர்வதேச சந்தை மதிப்பு ரூ.2 கோடிக்கும் மேல் இருப்பதாகக் கூறப்படும் போலி ஆவணத்தையும் தொழிலதிபரிடம் காட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைபெற்று வரும் ‘ரைஸ் புல்லிங்’ எனப்படும் நெல்லை ஈர்க்கும் செம்புப் பாத்திர மோசடி பாணியில், அந்தத் தட்டிற்கு விசித்திரமான சக்தி இருப்பது போன்ற போலி சோதனைகளையும் தொழிலதிபரின் கண் முன்னே செய்து காட்டியுள்ளனர். இதனை நம்பிய தொழிலதிபரை திண்டுக்கல் பகுதிக்கு வரவழைத்து, ரகசிய இடத்தில் பேரத்தை முடித்துள்ளனர்.

மோசடிக் கும்பல் கேட்டபடி, தொழிலதிபரும் உசிலம்பட்டியிலிருந்து ரூ.40 லட்சம் பணத்தைத் தயாராகக் கொண்டு வந்து அவர்களிடம் அட்வான்ஸாக வழங்கியுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு தட்டைக் கொடுக்காமல் அந்தக் கும்பல் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளது. மேலும், தொழிலதிபர் தொடர்புகொள்ள முயன்றபோது, அவர்களது மொபைல் போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தன.

இதையும் படியுங்க  "எங்க காசு எங்கடா?" 60,000 பேரை ஏமாற்றிய FQL கும்பல்... கைதான ஏஜென்ட்டை முற்றுகையிட்டு திண்டுக்கல்லில் வெடித்த கலவரம்!

இதையடுத்து தான் பணத்தை இழந்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழிலதிபர், திண்டுக்கல் மாவட்டக் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் உதவியுடன் மோசடிக் கும்பலின் மொபைல் எண்கள் மற்றும் செல்போன் சிக்னல்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன.

மொபைல் டவர் லொகேஷன் உள்ளிட்ட தொழில்நுட்பத் தகவல்களின் அடிப்படையில் தனிப்படை போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தி, கும்பலைச் சேர்ந்த நபர்கள் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்ததாகக் கூறப்படும் போலி தங்கத் தட்டையும் போலீஸார் பறிமுதல் செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த மோசடி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற விசித்திரப் பொருட்கள், பழங்காலப் பொருட்கள் மற்றும் போலி தொல்பொருட்களுக்கு அதீத மதிப்பு இருப்பதாகக் கூறி யாராவது அணுகினால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆசை வார்த்தைகள், போலி ஆவணங்கள் மற்றும் கண்முன்னே நடத்தப்படும் போலி சோதனைகளை நம்பி, அதிகளவில் பணத்தை வழங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படியுங்க  "எனக்கு ஏதாவது ஆச்சுனா அவர்தான் பொறுப்பு!" – அருண் ஐபிஎஸ் மீது டிஜிபி ஆபீஸில் பெண் கொடுத்த பகீர் புகார்!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago