நார்வே நாட்டின் ஸ்வால்பார்ட் தீவுப் பகுதியில், நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்த பனிக்கரடியை கப்பலின் உரத்த ‘ஃபாக்ஹார்ன்’ (Foghorn) ஒலியை எழுப்பி வேண்டுமென்றே தொந்தரவு செய்த நபருக்கு 50,000 நார்வேஜியன் குரோனர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வட துருவத்துக்கு அருகில் அமைந்துள்ள ஸ்வால்பார்ட், பனிக்கரடிகள் உள்ளிட்ட அரிய ஆர்க்டிக் வனவிலங்குகள் அதிகம் வாழும் பகுதியாகும். இங்கு வனவிலங்குகளைத் தொந்தரவு செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், ஸ்வால்பார்ட்டின் ‘லோம்ஃப்ஜோர்டன்’ (Lomfjorden) கடல் பகுதிக்கு அருகே ஒரு சுற்றுலா கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது, கரையில் ஒரு பனிக்கரடி அமைதியாகப் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பதை கப்பலில் இருந்தவர்கள் கவனித்துள்ளனர்.
தூங்கிக் கொண்டிருந்த பனிக்கரடி எழுந்து நகர்வதைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில், கப்பலை இயக்கிய நபர் வேண்டுமென்றே கப்பலின் உரத்த ஃபாக்ஹார்னை ஒலிக்கச் செய்துள்ளார். திடீரென எழுந்த பயங்கர சத்தத்தால் அதிர்ச்சியடைந்த பனிக்கரடி அங்கிருந்து அச்சத்துடன் ஓடிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வால்பார்ட் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்படி, பனிக்கரடிகள் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட விலங்குகளை தேவையில்லாமல் தொந்தரவு செய்வது, துரத்துவது அல்லது அவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது குற்றமாகும். இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்வால்பார்ட் ஆளுநர் அலுவலகம் விசாரணை நடத்தி, விதிமீறலில் ஈடுபட்ட நபருக்கு 50,000 நார்வேஜியன் குரோனர் அபராதம் விதித்தது. அந்த நபர் தனது தவறை ஒப்புக்கொண்டு அபராதத் தொகையைச் செலுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த விதமும் கவனம் பெற்றுள்ளது. கப்பலில் பயணம் செய்த மற்ற பயணிகளே, பனிக்கரடியை வேண்டுமென்றே ஹாரன் அடித்து எழுப்பியது தவறு எனக் கருதி, இந்தச் சம்பவத்தை ஸ்வால்பார்ட் ஆளுநர் அலுவலகத்துக்குப் புகார் அளித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபரின் பெயர், அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை நார்வே அதிகாரிகள் பொதுவெளியில் வெளியிடவில்லை.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஸ்வால்பார்ட் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வனவிலங்குகளைப் பாதுகாக்கும் வகையில் அங்கு கடுமையான விதிமுறைகள் அமலில் உள்ளன. குறிப்பாக, 2025 ஜனவரி முதல் அமலுக்கு வந்த புதிய விதிகளின்படி, கோடைக் காலத்தில் பனிக்கரடிகளிடம் இருந்து கப்பல்கள் மற்றும் படகுகள் குறைந்தது 300 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். மற்ற காலங்களில் குறைந்தது 500 மீட்டர் தொலைவு கடைப்பிடிக்க வேண்டும்.
வனவிலங்கு பாதுகாப்பு விதிகளை கடுமையாக மீறினால் அபராதம் மட்டுமின்றி, அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.
ஸ்வால்பார்ட்டில் வனவிலங்குகளைத் தொந்தரவு செய்ததற்காக அபராதம் விதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2024ஆம் ஆண்டு, பனிப்பாறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ‘வால்ரஸ்’ (Walrus) என்ற கடல்வாழ் விலங்கின் அருகில் மிக நெருக்கமாகச் சென்று புகைப்படம் எடுக்க முயன்ற சுற்றுலாப் பயணிக்கு 11,500 நார்வேஜியன் குரோனர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஸ்வால்பார்ட் பகுதியில் பனிக்கரடிகள் மிகவும் பாதுகாக்கப்பட்ட விலங்கினமாகக் கருதப்படுகின்றன. கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அறிவியல் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த ஸ்வால்பார்ட் தீவுப் பகுதியில் சுமார் 260 பனிக்கரடிகள் மட்டுமே இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இயற்கையான சூழலில் வாழும் வனவிலங்குகளை மனிதர்களின் பொழுதுபோக்குக்காகத் தொந்தரவு செய்யக் கூடாது என்பதையும், அவற்றின் பாதுகாப்புக்காக கடுமையான விதிமுறைகள் ஏன் அவசியம் என்பதையும் இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
