Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

vijay

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தனது 100 நாள் ஆட்சியை நிறைவு செய்துள்ள நிலையில், கடந்த 100 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை விளக்கும் வகையில் “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்” மற்றும் “ஒரு புதிய தொடக்கம்” என்ற காலப்பேழை புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் இந்தப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

Republic Tamil

முதலமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் 100 நாள் ஆட்சியின் முக்கிய நடவடிக்கைகளை விளக்கும் சிறப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். “100 நாள் ஆட்சி – ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி” என்ற கருத்தை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், மக்களின் நலன், விவசாயிகள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, வேலைவாய்ப்பு, தொழில் முதலீடு மற்றும் வெளிப்படையான நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

விவசாயிகளின் நலனுக்காக கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட ₹6,000 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ₹4,000 மற்றும் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ₹2,750 என சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய 150 நாட்கள் வேலைவாய்ப்பு உத்தரவாதம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுவதாக அரசு கூறியுள்ளது.

இதையும் படியுங்க  "சட்ட ஆதாரங்கள் எங்கே..? திமுக-வின் 4 வழக்குகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க கோர்ட்டில் இறங்கிய CM விஜய்!"

ஏழை மக்களின் சொந்த வீட்டு கனவை நிறைவேற்ற ₹3,500 கோடி நிதி ஒதுக்கீட்டில் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் தடையற்ற குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சாலை இணைப்புகளை மேம்படுத்த ஆண்டுதோறும் ₹6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

ஆதரவற்ற மற்றும் ஏழை எளிய பெண்கள், திருநங்கைகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக தலா 5 ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள் இலவசமாக வழங்கும் திட்டமும் இதில் இடம்பெற்றுள்ளது.

500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்கு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்படும் மின் பயன்பாட்டில் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அரசின் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்வதைத் தவிர்க்கும் வகையில், கணினி வழி கட்டிட வரைபட அனுமதி மற்றும் நேரில் செல்லத் தேவையில்லாத ‘ஃபேஸ்லெஸ்’ சொத்துப் பதிவு முறை உள்ளிட்ட மின்னணு சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்க  மாறாத திமுக விசுவாசம்..! டம்மியாக்கப்பட்ட அருண் ஐபிஎஸ்..! முன்பே சொன்ன #Republic தமிழ்நாடு..!

பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் அமைந்திருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ அமைக்கப்பட்டிருப்பதும், மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ரவுடியிசத்தை கட்டுப்படுத்த ‘STING’ என்ற சிறப்பு அமைப்பின் கீழ் 65 சிறப்புப் படைகள் உருவாக்கப்பட்டிருப்பதும் 100 நாள் நடவடிக்கைகளில் முக்கியமானதாகக் கூறப்பட்டுள்ளது.

Republic Tamil

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் அரசு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ₹1.02 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் 23 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1.07 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏழை எளிய குடும்பங்களின் திருமணங்களுக்கு மணமக்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டு ஆடைகள் வழங்கும் திட்டம், அரசுப் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன மிதிவண்டிகள் வழங்கும் திட்டம், அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. குடிசைப் பகுதிகளுக்கு மாற்றாக 70 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  டெல்லியில கிங் மேக்கர்… தமிழ்நாட்டுல டுவிஸ்ட் மேக்கர்… திருமாவின் ‘மிஸ்டரி’ அரசியல்! தமிழகமே சிரிப்பா சிரிக்குது..!

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்காக ₹560 கோடியும், ஏழை எளிய பெண்களின் திருமண உதவித் திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுச் சேலை வழங்க ₹812 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக சாதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், முதல் 100 நாட்களில் மக்கள் நலத்திட்டங்கள், விவசாயிகள் நலன், பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, மின்சாரம், வீட்டு வசதி, முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழக அரசு தனது சாதனை மலரில் தெரிவித்துள்ளது. முந்தைய காலத்தின் சுமைகளைக் குறைத்து, வெளிப்படையான மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதே தங்களின் நோக்கம் என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இன்னும் வேகமாக இருக்கும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago