தமிழக சட்டப்பேரவையின் 2026-27 நிதியாண்டுக்கான தற்போதைய கூட்டத்தொடரில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைமையிலான அரசின் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை மிஞ்சி யாராலும் சிந்திக்கவோ, திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தவோ முடியாது என அவர் சட்டப்பேரவையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

கடந்த திமுக ஆட்சியின் சாதனைகளையும், அப்போது செயல்படுத்தப்பட்ட ‘திராவிட மாடல்’ திட்டங்களின் தொலைநோக்குப் பார்வையையும் யாராலும் மிஞ்ச முடியாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டினார். அதேநேரத்தில், தவெக அரசு தாக்கல் செய்துள்ள திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கான புதிய திட்டங்களோ, புதிய சிந்தனைகளோ, புதிய அணுகுமுறைகளோ எதுவும் இல்லை என்று குற்றம்சாட்டினார்.
இந்த பட்ஜெட்டை ‘ஏமாற்றத்தின் வடிவம்’ என விமர்சித்த ஓ.பன்னீர்செல்வம், தவெக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் செயல்வடிவம் பெறவில்லை என்றும் சாடினார். மேலும், தற்போதைய பட்ஜெட் என்பது முந்தைய திமுக அரசின் ‘திராவிட மாடல்’ திட்டங்களின் விரிவாக்கமும் மறுபதிப்புமே தவிர, புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
“புதிய அரசு அமைந்திருக்கிறது, மக்களுக்காகப் புதிய திட்டங்கள் வரும் என்று நம்பி இந்த பட்ஜெட்டைப் புரட்டிப் பார்க்கிறேன். ஆனால் புதிய திட்டங்களைத் தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன்; எதுவும் சிக்கவில்லை” என ஓ.பன்னீர்செல்வம் கிண்டலாகப் பேசினார். தேர்தலுக்கு முன்பு தவெக வெளியிட்ட ‘வெற்றி தமிழகத் திட்டங்கள்’ உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’, தவெக ஆட்சியில் பெயர் மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி உரிமைத் தொகை உயர்த்தப்படவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்தார்.
இதேபோல், நெசவாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியையும் அவர் சுட்டிக்காட்டினார். தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்த பிறகும் அந்த வாக்குறுதி இன்னும் தேர்தல் அறிக்கையிலேயே தூங்கிக் கொண்டிருப்பதாக அவர் சாடினார்.
கடந்த திமுக அரசு தமிழகத்தை கடனில் ஆழ்த்திவிட்டுச் சென்றுவிட்டதாக தவெகவினர் தேர்தல் பிரசாரத்தின்போது குற்றம்சாட்டியதை நினைவுகூர்ந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது தவெக அரசின் நிதித்துறை செயலாளரே, “கடன் வாங்காமல் அடுத்த 50 ஆண்டுகளுக்கு யாரும் இங்கு ஆட்சி செய்ய முடியாது” எனக் கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார். இதன்மூலம், தேர்தல் காலத்தில் தவெக முன்வைத்த குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை முதலமைச்சர் விஜய் தற்போது உணர்ந்திருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் பேசிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட அமைச்சர்களுக்கு பதிலளித்த அவர், அதிமுகவில் இருந்து தவெகவுக்கு மாறி தற்போது அந்தக் கட்சியில் அமர்ந்திருக்கும் செங்கோட்டையனை குறிப்பிட்டு பேசினார்.

தவெக அரசின் பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துப் பேசியபோது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவரது பேச்சை ரசித்து மேஜையைத் தட்டி வரவேற்றதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, முந்தைய திமுக ஆட்சியின் திட்டங்களை அவர் பாராட்டியதையும், தற்போதைய தவெக அரசின் பட்ஜெட்டை விமர்சித்ததையும் திமுக உறுப்பினர்கள் வரவேற்றனர்.

“மக்கள் நலனில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை மிஞ்சி யாரும் சிந்திக்க முடியாது என்பதுதான் இந்த பட்ஜெட் காட்டும் உண்மை” என ஓ.பன்னீர்செல்வம் அழுத்தமாகப் பதிவு செய்தார். தவெக அரசு பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் முழுமையான பட்ஜெட் கூட்டத்தொடரில், ஓ.பன்னீர்செல்வத்தின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
