Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Sengottaiyan

தமிழக அரசியலில் ஐம்பது ஆண்டுகாலமாக கோலோச்சி வரும் மூத்த அரசியல்வாதி கே.ஏ.செங்கோட்டையன், தவெக-வில் இணைந்தபோது அக்கட்சிக்கு அது மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் கட்சியின் ‘அவை முன்னவர்’ என்ற அதிகாரப்பூர்வப் பொறுப்பில் இருந்தபோதிலும், அவர் கடும் மன உளைச்சலிலும், அதிருப்தியிலும் இருப்பதாகக் கசியும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

பறிக்கப்பட்ட சுதந்திரம்- முடக்கப்பட்ட அதிகாரம்
அரசியல் அனுபவமும், நிர்வாகத் திறனும் மிக்க ஒரு தலைவருக்குக் கட்சி மற்றும் ஆட்சியில் உரிய முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதே செங்கோட்டையனின் முதன்மை ஆதங்கமாகக் கூறப்படுகிறது. அவரது சொந்தத் துறை சார்ந்த அதிகாரிகளைக்கூட அவரது ஆலோசனையின்றி மாற்றியமைப்பதும், முடிவெடுக்கும் அதிகாரத்தில் அவரைப் புறக்கணிப்பதும் மூத்த தலைவரை வெகுவாகக் காயப்படுத்தியுள்ளது.

மேலும், கட்சித் தலைவர் விஜயைச் சந்திப்பதற்கே அடுக்கடுக்கான தடையைக் கடக்க வேண்டிய நிலைமை தனக்கு இருப்பதாக அவர் தனது ஆதரவாளர்களிடம் புலம்பியிருப்பது தவெகவின் உள்கட்சிப் பூசலை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

செங்கோட்டையனின் இந்த நிலைமையைக் கண்டு, அதிமுகவில் இருந்து தவெகவை நோக்கி நகரத் திட்டமிட்டிருந்த பல மூத்த நிர்வாகிகளும், இரண்டாம் கட்டத் தலைவர்களும் தற்போது பின்வாங்கியுள்ளனர். “50 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட மூத்த தலைவருக்கே இந்த நிலைமை என்றால், நமது கதி என்னவாகும்?” என்ற அச்சம் அவர்களை ஆட்கொண்டுள்ளது. இதனால் தவெகவை நோக்கிய மற்ற கட்சித் தலைவர்களின் படையெடுப்பு தற்காலிகமாக முடங்கியுள்ளது.

இதையும் படியுங்க  விஜயை பழி வாங்க நடந்த நாடகம்..! குமுறும் தவெக நிர்வாகிகள்..!

அதிரடி நடவடிக்கை எடுப்பாரா விஜய் ?
ஒரு அரசியல் கட்சிக்கு இளம் தலைவர்களின் உத்வேகம் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அனுபவமிக்க மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலும் அவசியமானது. செங்கோட்டையன் போன்ற அனுபவமிக்கத் தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டால், அது கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும். தன்னைச் சுற்றியுள்ள சிலரின் தவறான வழிகாட்டுதலால் மூத்த தலைவர்கள் விரக்தியடைவதை உணர்ந்து, கட்சியின் தலைவரான விஜய் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுப்பாரா? அல்லது இந்த அதிருப்திப் புகையை மேலும் பெரிதாக விட்டு வேடிக்கை பார்ப்பாரா? என்பதே தவெகவின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கும்.

அவை முன்னவர் செங்கோட்டையனுக்கே தவெக ஆட்சியில் முக்கியத்துவம் மறுக்கப்படுவதாக வரும் புகார்களுக்கு விஜய் செவிசாய்த்து நடவடிக்கை எடுப்பாரா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago