தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல; அது தமிழர்களின் உயிர், உணர்வு, அடையாளம், பண்பாடு மற்றும் நாகரிகம் என்று தமிழக வெற்றிக்கழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து எந்த மொழியையோ, மதத்தையோ, இனத்தையோ தாழ்த்திப் பேசவில்லை என்றும், மாறாக ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற இந்தியாவின் உயரிய கொள்கையை வெளிப்படுத்துகிறது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் 1891ஆம் ஆண்டு எழுதிய ‘மனோன்மணியம்’ நாடக நூலின் பாயிரத்தில் இருந்து தமிழ்த்தாய் வாழ்த்து எடுக்கப்பட்டது. 1970 நவம்பர் 23ஆம் தேதி முதல் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, 2021 டிசம்பர் 17ஆம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்ற நடைமுறை ஏற்கனவே உள்ளது.
இதனிடையே, 2026 ஜனவரி 28ஆம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்ட அரசு விழாக்களுக்கான வழிகாட்டுதல்களில் மாநிலப் பாடல் தொடர்பாக உரிய வழிமுறைகள் இடம்பெறவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த மே 27ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் அனுப்பியதாகவும், மாநிலப் பாடல்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஜூலை 9ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தில் மாநிலப் பாடல் பாடுவது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டில் 1970களில் இருந்தே தமிழ்த்தாய் வாழ்த்து அரசு நிகழ்ச்சிகளில் முதலில் பாடப்பட்டு வருவதாக அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“தமிழ் நமது உயிர்மூச்சு; தமிழ் மொழி நமது அடையாளம்; தமிழ்ப் பண்பாடு நமது பெருமை. தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையைப் பாதுகாப்பதில் தமிழக வெற்றிக்கழக அரசு ஒருபோதும் சமரசம் செய்யாது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில், நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாகத் தீர்மானிக்க வேண்டும் என்ற அரசினர் தனித் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரவு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
