நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ். மணியன், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்தார்.
விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க தற்போதைய அரசு தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருவதாகவும், அவரது ஆட்சி வெறும் “சும்மா ஆட்சி” என்றும் விமர்சித்தார்.

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ஓ.எஸ். மணியன், அந்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
“விவசாயிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளைத்தான் நிறைவேற்றுங்கள் என்று கேட்கிறார்களே தவிர, புதிதாக எதையும் கேட்கவில்லை. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று சொன்னீர்கள். அதைச் செய்தீர்களா? அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று கூறினீர்கள். அதைச் செய்திருக்கிறீர்களா? அதைப் பற்றி பேசியிருக்கிறீர்களா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
“கஜானாவில் பணம் இல்லை; என்னால் இயலவில்லை; என்னால் செய்ய முடியாது” என்றாவது அரசு கூறியிருக்கலாம். ஆனால், எதுவுமே பேசாமல் மௌனமாக இருப்பது மோசமான நிலை என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், தற்போதைய அரசின் தோல்விகளை மறைப்பதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியைப் பற்றி பேசுவதாகவும் ஓ.எஸ். மணியன் குற்றம்சாட்டினார்.
“இது விஜய் ஆட்சி என்பது வெறும் பெயரளவிலான ஆட்சியாகத்தான் உள்ளது. இதை மறைப்பதற்காக, தன்னைத் தலையில் முக்காடு போட்டுக்கொள்வதைப் போல அம்மா ஆட்சியைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். இந்த ஆட்சியை அம்மா ஆட்சியோடு ஒப்பிடக்கூடாது” என்று அவர் ஆவேசமாகக் கூறினார்.

ஜெயலலிதாவின் ஆட்சியைப் புகழ்ந்து பேசிய ஓ.எஸ். மணியன், காவிரி நீர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை உள்ளிட்ட தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளுக்காக அவர் தொடர்ந்து போராடியதாகக் குறிப்பிட்டார்.
“புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சியில் இருந்தபோதும், ஆட்சியில் இல்லாதபோதும் காவிரி நீர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை உள்ளிட்ட நம்முடைய ஜீவாதார உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர். வீராணம் தண்ணீரைக் கொண்டு வருவதற்கான திட்டமாக இருந்தாலும் சரி, தமிழகத்தின் உரிமைகள் தொடர்பான எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, அனைத்தையும் சாதித்துக் காட்டியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்” என்றார்.
மேலும், பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி அதில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா என்றும், பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர் என்றும் அவர் தெரிவித்தார்.
“புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலம் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாகவும், மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தித் தந்த உன்னதமான ஆட்சியாகவும் அமைந்திருந்தது. எனவே, அம்மா அவர்களின் ஆட்சியை விஜய் அவர்களின் ஆட்சியோடு ஒப்பிடக்கூடாது” என்று ஓ.எஸ். மணியன் கூறினார்.

விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள், மீனவர்கள் என சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படும்போது, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
“‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று வள்ளலார் கூறியதைப் போல, விவசாயிகளாக இருந்தாலும், நெசவாளர்களாக இருந்தாலும், வணிகர்களாக இருந்தாலும், மீனவர்களாக இருந்தாலும், அவர்கள் எங்கே பாதிக்கப்பட்டிருந்தாலும், தமிழர்கள் எந்த நாட்டில் எங்கே பாதிக்கப்பட்டிருந்தாலும், தானே பாதிக்கப்பட்டதைப் போல எண்ணி நடவடிக்கைகளை எடுத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்” என்றார்.
தொடர்ந்து, தற்போதைய ஆட்சியில் விவசாயிகள் கண்ணீரில் தத்தளித்து வருவதாகக் கூறிய ஓ.எஸ். மணியன், “இதுவரை இருந்த முதலமைச்சர்களிலேயே ஒரு மோசமான முதலமைச்சர் என்று சொன்னால், அது விஜய் அவர்கள்தான் என்று கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என கடுமையாக விமர்சித்தார்.
அதிமுக ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், எம்.ஜி.ஆர். காலம் தொடங்கி ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலம் வரை அதிமுக அரசு பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
“அதிமுக அரசு என்பது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் காலத்தில் தொடங்கி, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் காலத்திலும், புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் காலத்திலும் வரலாறு படைத்துள்ளது. எண்ணற்ற சாதனைகளைப் படைத்திருக்கிறோம். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வருவது என்பது சாதாரண விஷயமா? ஆறு மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்குவது என்பது சாதாரண விஷயமா?” என கேள்வி எழுப்பினார்.

கொரோனா காலத்தில் வருவாய் பாதிக்கப்பட்ட நிலையிலும், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களின் நலனுக்காக அதிமுக அரசு நடவடிக்கை எடுத்ததாகவும் ஓ.எஸ். மணியன் குறிப்பிட்டார்.
இதனிடையே, தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில், தவெக சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா சட்டப்பேரவையில் பேசியபோது, “முதலமைச்சர் விஜய் அவர்களின் பெயரைக் கேட்டாலே ஊழல்வாதிகள் அனைவரும் நடுங்குகிறார்கள்” என்று கூறியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, விவசாயிகள் பிரச்சினை, தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் ஆட்சி செயல்பாடுகள் குறித்து ஓ.எஸ். மணியன் முன்வைத்துள்ள இந்தக் கடுமையான விமர்சனங்கள் தமிழக அரசியலில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
