தமிழ்நாடு சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதியாக இருந்தபோது தான் எதிர்கொண்டதாகக் கூறும் மனித உரிமை மீறல்கள், சிறை நடைமுறைகள் மற்றும் சித்திரவதை அனுபவங்கள் குறித்து சமீபத்திய ஊடக நேர்காணல் ஒன்றில் விரிவாகப் பேசியுள்ளார்
. தனது வாழ்க்கையில் சிறைவாசம் ஏற்படுத்திய தாக்கமே, இன்று காவல் சித்திரவதைகள் மற்றும் லாக்கப் மரணங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கத் தூண்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறைக்குள் முதன்முறையாக கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட நாளை நினைவுகூர்ந்த வன்னி அரசு, சிறைக்குள் நுழைந்தவுடன் வார்டன்கள் மற்றும் சிறை அதிகாரிகள் முன்னிலையில் அனைத்து ஆடைகளையும் கழற்றச் சொல்லி, குனிய வைத்து மிகவும் அவமானகரமான முறையில் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறினார்.
அரசியல் கைதிகள், சமூகப் போராளிகள் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரையும் சாதாரண குற்றவாளிகளைப் போல நடத்தி, இழிவான வார்த்தைகளால் அவமதிப்பது அங்குள்ள வழக்கமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, தங்குமிடம் மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். மனிதாபிமானம் இல்லாத சூழலில் கைதிகள் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனது அரசியல் போராட்டங்களின் காரணமாக பல்வேறு காலகட்டங்களில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக வன்னி அரசு கூறினார். குறிப்பாக, ஈழத் தமிழர் ஆதரவு போராட்டங்கள், சாதி எதிர்ப்புப் பேரணிகள் மற்றும் சமூகநீதிக்கான களப் போராட்டங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோதுதான் இந்த அனுபவங்களை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

தனது முதல் சிறை அனுபவத்தை விவரித்த அவர், “மதுரை சிறையில் முதன்முறையாக கைதியாக நுழைந்தபோது, முதலில் என்னுடைய சாதி என்ன என்று கேட்டார்கள். நான் சாதியைச் சொன்ன உடனே, கழிவறை அருகில் சென்று படுக்கும்படி கூறினார்கள்.
எங்களுடன் கைது செய்யப்பட்டிருந்த 26 பேரும் கழிவறையைச் சுற்றியே படுத்திருந்தோம். அங்கு வருபவர்கள் எங்கள் மீது கால்வைத்து நடந்தார்கள். தண்ணீர் தெளித்தார்கள். எச்சில் துப்பினார்கள். அது மிகவும் கொடுமையான அனுபவமாக இருந்தது” என்று வேதனையுடன் நினைவுகூர்ந்தார்.
அந்தச் சூழ்நிலையிலும் தாங்கள் அமைதியாக இருக்கவில்லை என்றும், “நாங்கள் சமூகநீதி, சமத்துவம் மற்றும் சமூகச் சீர்திருத்தத்திற்காகப் போராடி சிறைக்கு வந்தவர்கள். சிறைக்குள்ளேயே இதுபோன்ற சமூக அநீதி நடந்தால் அதற்கும் எதிராகப் போராட வேண்டும் என்று முடிவு செய்து, மறுநாள் காலை சிறைக்குள்ளேயே போராட்டத்தைத் தொடங்கினோம்” என்றும் அவர் கூறினார்.
சமூகத்தில் எங்கு அநீதி நடந்தாலும், அதற்கு எதிராகக் களத்தில் நின்று போராட வேண்டியது அவசியம் என்றும் வன்னி அரசு வலியுறுத்தினார். “இன்று நான் அமைச்சராக இருக்கிறேன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. அமைச்சர் பதவி இன்று இருக்கும், நாளை இல்லாமலும் போகலாம். ஆனால் சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்கான எனது போராட்டம் என்றும் தொடரும்” என்று அவர் உறுதியாகக் கூறினார்.
இளைஞர்கள் சமூகநீதிக்கான சிந்தனையுடன் உருவாக வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். “சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் எளிய மக்களைத் தண்டித்து, அதிகாரம் உள்ளவர்களிடம் சட்டம் வளைந்து கொடுப்பதாக மக்கள் உணர்கிறார்கள்.
. இந்த நிலை மாற வேண்டும். சமூகத்தை வழிநடத்துவது சட்டம்தான். புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டமே நாட்டின் அடித்தளம். அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில்தான் இந்தியா இயங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், மத அடிப்படையிலான வெறுப்பரசியல், சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல், சாதி அடிப்படையிலான பாகுபாடு ஆகியவை சமூகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார். “முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிராக வெறுப்பை உருவாக்கும் அரசியலை எதிர்த்து இளைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும். சமத்துவத்திற்கு எதிரான எந்த முயற்சியையும் மக்கள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அம்பேத்கர் வலியுறுத்திய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளே இந்திய அரசியலமைப்பின் அடிப்படை என்றும், அவற்றை பலவீனப்படுத்தி வேறு சிந்தனைகளை நிலைநிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
“அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை மதிப்புகளைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும். பெரும்பான்மைவாதத்தை முன்னிறுத்தி சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வரப்பட்டால், உண்மையான சமத்துவம் எப்போதும் கிடைக்காது” என்று அவர் தெரிவித்தார்.

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் உள்ளிட்ட சமூகச் சீர்திருத்தத் தலைவர்கள் உருவாக்கிய சமத்துவப் பாதையை அடுத்த தலைமுறையினர் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். “இளைஞர்கள் ஒவ்வொருவரும் சமூக அநீதிகளுக்கு எதிராகத் தங்களது குரலை உயர்த்த வேண்டும். அப்போதுதான் உண்மையான விடுதலையும் சமத்துவமும் கொண்ட சமூகத்தை உருவாக்க முடியும்” என்று வன்னி அரசு தனது உரையை நிறைவு செய்தார்.
மேலும், தனது சிறை அனுபவங்களே காவல் நிலையங்களில் நடைபெறும் சித்திரவதைகள், லாக்கப் மரணங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கத் தூண்டியதாகவும் அவர் கூறினார். இத்தகைய சம்பவங்கள் இனி தமிழகத்தில் எங்கும் நடைபெறக் கூடாது என்பதில் தனது சமூகநீதித் துறையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதேபோல், சிறைகளில் உள்ள கைதிகளின் அடிப்படை மனித உரிமைகளை உறுதி செய்வதற்கும், காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை முற்றிலும் ஒழிப்பதற்கும் தேவையான சட்டரீதியான சீர்திருத்தங்களை தனது அமைச்சகம் மூலம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வன்னி அரசு உறுதியளித்தார்.
சமீபத்தில் அரசியல் ரீதியாக எழுந்த விமர்சனங்களுக்கும் பதிலளித்த வன்னி அரசு, “பாஜக-வின் ஆதரவால் இந்த அரசு இயங்குகிறது என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், நான் எனது அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்யத் தயார்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
