அதிமுக எம்எல்ஏக்கள் தனியார் மண்டபத்தில் முதலமைச்சர் விஜயை சந்திக்க இன்று நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களின் தொடர்ச்சியாக, இன்று முதலமைச்சர் விஜயை அதிமுக-வைச் சேர்ந்த சி.வி.சண்முகம் தலைமையிலான அணி எம்.எல்.ஏ-க்கள் சந்திக்கவிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரப் பகிர்வா? ஆட்சிக்கு ஆதரவா?
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதிமுகவின் ஒரு தரப்பு எம்.எல்.ஏ-க்கள் அவரைச் சந்திக்க முயல்வது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளது.

அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்
அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவுடன் ரகசிய உடன்படிக்கையில் இருப்பதாக ஒரு தரப்பு எம்.எல்.ஏ-க்கள் கருதுகின்றனர். இந்நிலையில், சி.வி. சண்முகம் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தனியாக ஆலோசனை நடத்தியதும், தற்போது முதலமைச்சர் விஜயை சந்திக்க நேரம் கேட்டுள்ளதும், அதிமுகவிற்குள் பிரளயத்தைக் கிளப்பி உள்ளது.
தவெக-விற்கான மறைமுக ஆதரவு?
திருப்பத்தூர் தொகுதி இழுபறி, விஜய்யின் ராஜினாமா போன்ற காரணங்களால் தற்போதைய அரசு நூலிழையில் பெரும்பான்மையைத் தக்கவைக்கப் போராடுகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் சி.வி. சண்முகம் தரப்பு அளிக்கும் ஆதரவு, தவெக அரசுக்கு ஒரு பெரிய பலமாக அமையும். அதேவேளை, இது திமுகவின் அரசியல் வியூகங்களைச் சிதைக்கும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

திமுகவின் நெருக்கடிக்கு சவால்
விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்திய முஸ்லீம் லீக் கட்சிகள் வெளியில் இருந்தே விஜய் ஆட்சி அமைக்க ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன. திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவோம் என அறிவித்துள்ளன. இதனால், ஸ்டாலின் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் தவெக ஆட்சி கவிழலாம். அதிமுகவின் ஒரு பிரிவினரைத் தன் பக்கம் இழுப்பதன் மூலம் விஜய் தனது நிலையை வலுப்படுத்திக்கொள்ள முயலலாம். சி.வி. சண்முகம் அணியின்ஆதரவு, சட்டமன்றத்தில் விஜய்க்குப் பெரும் உதவியாக இருக்கும்.
இந்தச் சந்திப்பு ஒரு சாதாரண மரியாதை நிமித்தமான சந்திப்பாகத் தெரியவில்லை. ஒருவேளை சண்முகம் அணியின் எம்.எல்.ஏ-க்கள் விஜய்க்கு ஆதரவளிக்கும் பட்சத்தில், இந்த விவகாரத்தில் திமுகவின் ஆதிக்கம் பெரும் சரிவைச் சந்திக்கும். “திமுக அசைக்க நினைத்தால் அரசு விழும்” என்ற நிலை மாறி, “சி.வி.சண்முகம் அணியின் அதிமுக ஆதரவுடன் அரசு நிலைக்கும்” என்ற புதிய சூழல் உருவாகவும் வாய்ப்புள்ளது.
