Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி என அறியப்படும் ‘மர்டர்’ மணிகண்டன், பரோல் காலம் முடிந்து மீண்டும் சிறைக்குத் திரும்பும் வழியில் வெளியிட்ட உருக்கமான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. “ஒரு நிமிடக் கோபம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” என்று அவர் பேசியுள்ள வீடியோ, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதுச்சேரி வாணரப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் மீது கொலை, ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. பல ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அவர், தற்போது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஏனாம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், அவரது மகனும் மகளும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறி, குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக மணிகண்டன் பரோல் கோரியிருந்தார். ஆனால், சிறைக்கு வெளியே அவருக்கு எதிரிகளால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, புதுச்சேரி சிறைத்துறை முதலில் பரோல் வழங்க மறுத்தது.

இதனைத் தொடர்ந்து, அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன், கடுமையான போலீஸ் பாதுகாப்புடன் 15 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட்டனர்.

இதையும் படியுங்க  “தாத்தா, பாட்டி கண்முன்னே நொடியில் கடத்தப்பட்ட நான்கரை வயது சிறுமி”

உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பரோலில் வெளியே வந்த மணிகண்டன், தனது குடும்பத்தினருடன் கழித்த தருணங்களை வீடியோவாக பதிவு செய்திருந்தார். பரோல் காலம் முடிந்து ஜூலை 20-ஆம் தேதி மீண்டும் சிறைக்குத் திரும்பியபோது, சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோவில் தனது வாழ்க்கை குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.

“ஒரு நிமிடக் கோபம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. 20 வயதில் சிறைக்குள் சென்ற நான், இன்று 48 வயதிலும் அதே சிறைக் கொட்டகைக்குள் எதிர்காலத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையின் 27 ஆண்டுகளை சிறையிலேயே இழந்துவிட்டேன்.

“கத்தியும் இரத்தமும் ஒருபோதும் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகாது. அவை இளைஞர்களின் இளமையை சிறைக் கொட்டகைக்கு உணவாக்கிவிடும். வாழ்க்கை ஒரே முறைதான் கிடைக்கும். இழந்த இளமையையும், தொலைந்த வாழ்க்கையையும் இனி எங்கும் தேடினாலும் மீட்டெடுக்க முடியாது.” என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், “இளைய தலைமுறையினரே… நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல, இந்த சமூகத்திற்கும், நாட்டிற்கும் மிகப்பெரிய பலம். இந்த நாட்டில் நேர்மையாக வாழ ஏராளமான நல்ல வழிகள் உள்ளன. அதில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து முன்னேறுங்கள். வன்முறை, கோபம் மற்றும் குற்றப் பாதையை ஒருபோதும் தேர்ந்தெடுக்காதீர்கள்.” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படியுங்க  விஜய் பதவியேற்பில் நடந்த அதே சம்பவம்..! மீண்டும் ஒரு மொழிப்போரா..? அதிர்ந்த புதுச்சேரி ஆளுநர் மாளிகை..!

மேலும், இனி எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல், தனது குடும்பத்திற்காக மட்டுமே வாழ விரும்புவதாகவும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த 2024-ஆம் ஆண்டிலும் மணிகண்டன் சிறையிலிருந்தபடியே தனது ஆதரவாளர்கள் மூலம் மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, போலீசார் அவரிடம் சிறையிலேயே விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது பரோல் முடிந்து மீண்டும் சிறைக்குத் திரும்பும் நேரத்தில், தனது கடந்தகால வாழ்க்கையை நினைவுகூர்ந்து இளைஞர்களுக்கு விடுத்துள்ள இந்த உணர்ச்சிப்பூர்வமான அறிவுரை சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், அவரது உருக்கமான பேச்சு குறித்து பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகின்றன.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago