Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

”திமுக, அதிமுக ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கப் போவதாக மூன்றாம் கட்ட தலைவர்களே பேசி வருகின்றனர். அண்ணாவின் தம்பிகள் கைகுலுக்க கூடாதா? என தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியில் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ செய்தியாளர்களிடம் பேசினார். ”சமீபத்தில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக ஹபீபி திரைப்படம் பயணித்துக் கொண்டிருக்கிறது. தென் மாவட்ட முஸ்லிம்களுடைய வாழ்வியல் கலாச்சாரத்தையும், நெசவு தொழிலாளர்கள் உடைய இன்னல்களையும், வெளிநாடுகளுக்கு சென்று பிழைப்பு தேடக்கூடிய குடும்பங்களின் வலியை சொல்லக்கூடிய படமாக இந்த படம் அமைந்துள்ளது. இத்திரைப்படத்திற்கு தமிழ்நாடு அரசு சிறந்த திரைப்படத்திற்கான விருதை வழங்க வேண்டும்.

சமீபத்தில் தமிழ்நாட்டின் டெல்லி மேலிட பொறுப்பாளராக கன்னடர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டார். அதற்கு கண்டனங்கள் எழுந்தது. அதேபோல தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக தவெக நிர்வாகி லயோலா மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தங்களுடைய சுற்று வட்டார பிரமுகர்களை தொடர்ச்சியாக அரசு பொறுப்பில் நியமனம் செய்வதை இந்த ஆட்சி மேற்கொண்டு வருகிறது. அவர் அதற்கு பொருத்தமான ஒரு கல்வியாளராக இருந்தால் மறுப்பதற்கு இல்லை. திரைத்துறை, அரசியல் துறை பின்னணியை சார்ந்தவராக இருப்பவர்களை இது போன்ற முக்கிய பொறுப்பில் அமர்த்துவது சரிதானா? எனப் புரியவில்லை. ஏற்கனவே பணியாற்றியவர்கள், அனுபவம் பெற்றவர்களை நியமித்திருந்தால் சர்ச்சை ஆகாது.

இதையும் படியுங்க  "போலி என்கவுண்டர் முதல் IPS அருணின் மொத்த ஜாதகத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைத்த சவுக்கு சங்கர்! அதிரும் காக்கித்துறை!

பொது இடங்களில் கால்நடைகள் வெட்டப்படுவதை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளதை வரவேற்கிறேன். தமிழ்நாடு அரசு இது குறித்து கொள்கை வரையறைகளை உருவாக்கி, ஒரு கொள்கை திட்டத்தை சட்டம் ஆக்கினால் சிறப்பாக இருக்கும். வணிகத்திற்காக ஆடு, மாடுகளை வெட்டுவது என்பது வேறு, பக்திக்காக வெட்டுவது என்பது வேறு. கிராமங்களில் குலதெய்வம் கோவில் வழிபாடுகளில் ஆடுகள் வெட்டி விருந்து வைக்கப்படுகிறது, அது அவர்களின் நம்பிக்கை. அதேபோன்று பக்ரீத் பண்டிகை காலங்களில் கால்நடைகளை குர்பானி பலியிடுவது அவர்களது நம்பிக்கை. மக்களுடைய மதம் சார்ந்த ஆன்மீக நம்பிக்கைகளில் இது போன்ற சட்டங்கள் குறுக்கிட கூடாது. அது எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் வழிபாட்டு உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ப தமிழ்நாடு அரசு சட்டத்தை இயற்றினால் சிறப்பாக இருக்கும்.

மேகதாது விவகாரத்தில் தொடர்ந்து கர்நாடகத்தில் பல அரசுகள் அத்துமீறுகின்றன. தற்போது அங்கு முதல்வராக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் சிவக்குமார் அடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் கன்னட மக்களை தன் பக்கம் அணி திரட்ட வேண்டும் என்ற அரசியல் நோக்கத்திற்காக இப்போது செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்க  "காலி கஜானாவை நிரப்ப முதல்வர் விஜய் போட்ட மாஸ் ஸ்கெட்ச்? ஆர்.பி.ஐ கவர்னருடன் கோட்டையில் முக்கிய சந்திப்பு!"

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராகவும், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் கர்நாடக அரசு செயல்படுகிறது. தமிழ்நாடு அரசு உடனடியாக கர்நாடக அரசின் மீதும், கர்நாடகத்தின் முதல்வர் மீதும் உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமதம் இன்றி தொடர வேண்டும்.

ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கலைந்து விடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து.

திமுக, அதிமுக ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கப் போவதாக முதல் கட்ட தலைவர்கள் அறிவிக்கவில்லை. மூன்றாம் கட்ட தலைவர்களே பேசி வருகின்றனர். இருந்தாலும் அண்ணாவின் தம்பிகள் கைகுலுக்க கூடாதா? இதில் என்ன தவறு உள்ளது? எதிரும், புதிருமான கட்சிகள் எல்லாம் தேசிய அளவிலான கூட்டணியில் ஒன்று சேருகிறார்கள். அது போன்ற ஒரு கருத்து உருவாகி இருக்கலாம். இதை திமுகவின் தலைவரும், அதிமுகவின் தலைவரும் சொன்ன பிறகுதான் நாம் விவாதிக்க முடியும்.

கடந்த காலங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வசூல் வேட்டைக்காக சில நடிகர்கள் நடித்தார்கள். தற்போது அந்த நிலை மாறி பல நல்ல திரைப்படங்கள் வெளி வருவது ஆரோக்கியம்.

இதையும் படியுங்க  மக்களின் கவனத்திற்கு! 3 இலவச சிலிண்டர் பணம் உங்க அக்கவுண்டுக்கு வரணுமா? உடனே இத பண்ணுங்க!

தவெக ஆட்சி அமைந்து 60 நாட்கள் தான் ஆகிறது. ஆறு மாதம் முடிந்த பிறகு தான் மதிப்பீடு செய்ய முடியும். அதே நேரத்தில் 717 மதுக்கடைகளை மூடியது நல்ல விஷயம், பாராட்டுக்குரியது. படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால் நிச்சயமாக நல்ல மதிப்பெண் வழங்கலாம். ஒரு ஆறு மாதம் காத்திருப்போம்” எனத் தெரிவித்தார்.

-ஜான் கண்ணா, திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago