Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த மகாலிங்கம் – வாசுகி தம்பதியரின் மகள் தர்ணிகா, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்்சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை விடுதியில் உள்ள கழிவறைக்குச் சென்ற மாணவி, நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக மாணவிகள் கதவை உடைத்துப் பார்த்தபோது, தர்ணிகா சுயநினைவின்றி கிடந்ததாகக் கூறப்படுகிறது.

உடனடியாக பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவிகள் இணைந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாணவியின் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், தங்கள் மகளின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாணவியின் உடல்நிலை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்க  "5 மணி நேரம் மாயமான மாணவர்! லட்சங்களில் கட்டணம்… பூஜ்யமான பாதுகாப்பா? பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமா?"

“முதலில், ‘உங்கள் மகள் மயங்கி விழுந்துள்ளார். ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம். நீங்கள் உடனே வாருங்கள்’ என்று தெரிவித்தனர்.

அதன்பிறகு, மீண்டும் தொடர்பு கொண்டபோது, ‘மருத்துவமனைக்குச் சென்று தகவல் தெரிவிக்கிறோம்’ என்றனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைத்தபோது, ‘தர்ணிகா உடல்நலம் பெற்று மீண்டும் விடுதிக்குத் திரும்பிவிட்டார். நன்றாக இருக்கிறார். நீங்கள் பயப்பட வேண்டாம்’ என்று கூறினர்.

நாங்கள், ‘தர்ணிகாவிடம் பேச வேண்டும்’ என்று கேட்டபோது, ‘நீங்கள் நேரில் வந்த பிறகு பார்க்கலாம்’ என்று கூறினர்.

‘ஏன் மறைக்கிறீர்கள்? என்ன நடந்திருந்தாலும் வெளிப்படையாகச் சொல்லுங்கள்’ என்று வலியுறுத்திய பிறகே, ‘தர்ணிகா உயிரிழந்துவிட்டார்’ என்று தெரிவித்தனர். முதலில் நன்றாக இருப்பதாகக் கூறிவிட்டு, பின்னர் உயிரிழந்ததாகச் சொன்னது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது” என்று பெற்றோர் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும், விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பார்க்க அனுமதி கேட்டபோது, ஒரே ஒரு காட்சியை மட்டுமே காட்டியதாகவும், மாணவி மயங்கி விழுந்த பிறகு அவரை தூக்கிச் செல்லும் காட்சிகளையோ அல்லது வரவேற்பு அறையில் பதிவான காட்சிகளையோ காட்டவில்லை என்றும் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

இதையும் படியுங்க  வேலூரில் பெண் தலைமைக் காவலர் குத்திக்கொலை – குடும்பத் தகராறில் கணவர் வெறிச்செயல்..?

இதுகுறித்து கேட்டபோது, “அந்த சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை” என்று நிர்வாகம் தெரிவித்ததாகவும் அவர்கள் கூறினர்.

காலை 6.30 மணியளவில் குளிக்கச் சென்ற மாணவியை மதியம் ஒரு மணி வரை யாரும் தேடாதது ஏன்? வகுப்பிற்கு வராததை ஆசிரியர்கள் கவனிக்கவில்லையா? வருகைப் பதிவு எடுக்கப்படவில்லையா? விடுதியில் தங்கியிருந்த மாணவிகளின் வருகை, வெளியே செல்வது உள்ளிட்ட விவரங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லையா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை மாணவியின் பெற்றோர் எழுப்பினர்.

மேலும், “காலை 6.30 மணிக்கே வாளியுடன் குளிக்கச் சென்ற என் மகளை மதியம் 12.20 மணிக்குத்தான் வெளியே தூக்கிக்கொண்டு வந்துள்ளனர். அந்த ஆறு மணி நேர இடைவெளியில் எத்தனை பேர் அந்தக் கழிவறையை பயன்படுத்தினர்? யாரும் கவனிக்கவில்லையா?

காலை 7.30 மணிக்கு வகுப்பில் வருகைப் பதிவு எடுத்தபோதே மாணவி வரவில்லை என்பது தெரியவந்திருக்க வேண்டும். அப்போதே விடுதிக்குத் தகவல் தெரிவித்து தேடியிருந்தால், எங்கள் மகளை உயிருடன் மீட்டிருக்க முடிந்திருக்கும்.

விடுதியில் மாணவர்கள் உள்ளே வந்தது, வெளியே சென்றது போன்ற விவரங்களைப் பதிவு செய்யும் முறையான பதிவேடு இல்லை. மாணவர்களின் பாதுகாப்பில் நிர்வாகம் அலட்சியம் காட்டியுள்ளது.

இதையும் படியுங்க  தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை அடிச்சு தும்சம் செய்யப்போகுது? வானிலை மையம் குளு குளு அப்டேட்

விடுதி வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இருந்த கேமராக்களும் தெளிவாக செயல்படவில்லை. எங்கள் மகளின் மரணத்திற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியமே முழு காரணம்” என்று பெற்றோர் குற்றம்சாட்டினர்.

மேலும், பல்கலைக்கழகத்தில் படிக்கும் சில மாணவிகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக தங்களது மகள் ஏற்கனவே கூறியிருந்ததாகவும், அத்தகைய முடிவுகளை ஒருபோதும் எடுக்கக் கூடாது என்று தாங்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்ததாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.

“உனக்கு படிப்பில் சிரமம் இருந்தாலோ, மனக்கஷ்டம் இருந்தாலோ உடனே வீட்டிற்கு வந்துவிடு. எந்தக் காரணத்திற்காகவும் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கக் கூடாது என்று எப்போதும் கூறியிருந்தோம். அதற்கு, ‘நான் அப்படிப்பட்ட முடிவை எடுக்க மாட்டேன்’ என்று என் மகள் உறுதியளித்திருந்தாள்” என்று தாய் கண்ணீருடன் கூறினார்.

இதற்கிடையில், மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதால், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago