https://republictn.com/

இயக்குநர் சேட்டன் டிகே இயக்கத்தில், நடிகை காஜல் அகர்வால் மற்றும் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ (The India Story) திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகிற ஜூலை 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தை இயக்குநர் சேட்டன் டிகே இயக்கியுள்ளார். கதையை சாகர் பி. ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் (Zee Studios) நிறுவனம் உலகம் முழுவதும் இந்தப் படத்தை வெளியிடுகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் படம் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

நாட்டில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட சமூக மற்றும் தேசியக் கருத்துகளை மையமாகக் கொண்ட அதிரடி த்ரில்லர் திரைப்படமாக ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் புரோகிரஸ்’ (The India Story: Slow Poison in Progress) உருவாகியுள்ளது.

உணவுக் கலப்படம், ரசாயனப் பயன்பாடு, பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்த விவசாயம் மற்றும் அவை பொதுமக்களின் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளை இப்படம் மையக் கருத்தாகக் கொண்டுள்ளது.

நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் கலக்கப்படும் ரசாயனங்களும், காய்கறிகளில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளும், மனித உடலில் மெதுவாக விஷமாக மாறும் அபாயத்தையே படத்தின் தலைப்பு சுட்டிக்காட்டுகிறது.

இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால், அட்வகேட் அர்ச்சனா என்ற வலிமையான வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மக்களின் உயிருடன் விளையாடும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக, ஒரு சாதாரண மனிதருடன் இணைந்து நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தும் கதாபாத்திரத்தில் அவர் தோன்றுகிறார்.

சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, டீசரில் படக் காட்சிகள் மட்டுமல்லாமல், நாட்டில் நடைபெற்ற உணவுக் கலப்படம், ரசாயன ஊசிகள், போலிப் பால் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான உண்மையான செய்தித் தொகுப்புகள் மற்றும் புள்ளிவிவரங்களும் இணைக்கப்பட்டிருப்பது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும், சமீபத்தில் வெளியான போஸ்டரில், பரபரப்பான காய்கறி சந்தையின் நடுவே கோபமடைந்த வியாபாரிகள் சூழ்ந்த நிலையில், காஜல் அகர்வாலும் ஷ்ரேயாஸ் தல்படேயும் சிக்கிக்கொள்வது போன்றும், அவர்கள் மீது காய்கறிகள் வீசப்படுவது போன்றும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தப் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோருடன், முன்னணி குணச்சித்திர நடிகர்களான முரளி சர்மா, அதுல் திவாரி, கமலேஷ் சாவந்த் மற்றும் அஸ்வினி பண்டே ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வணிக ரீதியான திரைப்படமாக மட்டுமல்லாமல், ஒவ்வொரு குடும்பமும் கட்டாயம் பார்க்க வேண்டிய விழிப்புணர்வுத் திரைப்படமாக இருக்கும் என்று இயக்குநர் சேட்டன் டிகே, நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago