திருச்சி மாநகரின் உறையூர், ஆயித்ஷா நகர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில், இரவு நேரங்களில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களையும், போதை மாத்திரைகளையும் பயன்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பகல் நேரத்திலேயே இரண்டு சிறுவர்கள் அந்த மைதானத்தில் அமர்ந்து போதைப்பொருள் பயன்படுத்துவதாகக் கூறப்படும் காட்சி, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள இருவரும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களாகத் தோன்றுவதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர்கள் பயன்படுத்தியது எந்த வகையான போதைப்பொருள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை.
ஏற்கனவே திருச்சி மாநகரில் கஞ்சா பயன்பாடு மற்றும் அதன் பின்னணியில் அடிதடி, அரிவாள் வெட்டு, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தற்போது சிறுவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாகக் கூறப்படும் இந்த வீடியோ வெளியாகியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, கஞ்சா மற்றும் பிற போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் தீவிர நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
