அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பு அமைப்பு (Inspector General) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பும், சம்பவம் நடைபெற்ற நாளிலும் உள்ளூர் காவல்துறை அனுப்பிய 102 ரேடியோ எச்சரிக்கை தகவல்கள் அமெரிக்க இரகசிய சேவைப் பிரிவுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை. இதன் காரணமாக உருவாகியிருந்த ஆபத்தான சூழ்நிலையை முன்கூட்டியே உணர முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்தாரியான தாமஸ் க்ரூக்ஸ், துப்பாக்கியுடன் கட்டிடத்தின் கூரையில் இருந்தது தொடர்பாக உள்ளூர் காவல்துறை அனுப்பிய மூன்று முக்கிய ரேடியோ தகவல்களும் இரகசிய சேவை அதிகாரிகளுக்குச் சென்றடையவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், தாமஸ் க்ரூக்ஸ் குறித்து உள்ளூர் காவல்துறையிடம் பல்வேறு தகவல்கள் இருந்தபோதிலும், அவற்றை ஒருங்கிணைத்து பகிர்வதற்கான தகவல் தொடர்பு மையம் முறையாக செயல்படாததால், மிகக் குறைந்த தகவல்களே இரகசிய சேவைப் பிரிவுக்குக் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில், இரகசிய சேவைப் பிரிவில் 21.4 சதவீத ஊழியர்கள் பற்றாக்குறை இருந்ததாகவும், இதன் காரணமாக பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதால், கடுமையான உடல் மற்றும் மனச் சோர்வுக்கு ஆளாகியிருந்ததாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
தாக்குதலுக்கு முன்பாக, தாமஸ் க்ரூக்ஸ் பேரணி நடைபெற்ற பகுதியை ட்ரோன் மூலம் கண்காணித்திருந்தார். ஆனால், அந்த ட்ரோனை கண்டறிய பயன்படுத்தப்பட்ட இரகசிய சேவைப் பிரிவின் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு முழுமையாக செயல்படாததுடன், அதை இயக்கிய அதிகாரிக்கு போதிய பயிற்சி இல்லாததும், உபகரணங்கள் முறையாகச் சோதிக்கப்படாததும் பாதுகாப்பு குறைபாடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோல், டிரம்ப் பேசிய மேடையை நேரடியாகக் கண்காணிக்கக் கூடிய ஏ.ஜி.ஆர். (AGR) கட்டிடத்தின் கூரை முழுமையாக பாதுகாக்கப்படவில்லை என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும், அந்த பாதுகாப்பு குறைபாட்டை சரிசெய்ய இரகசிய சேவைப் பிரிவு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், மேடையிலிருந்து அந்தக் கட்டிடக் கூரை நேரடியாகத் தெரியாத வகையில் தடுப்புகள் அமைக்கும் வசதி இருந்தபோதிலும், அவை பயன்படுத்தப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரம்புக்கு எதிராக இருந்த அச்சுறுத்தல்கள் தொடர்பான முக்கிய உளவுத்துறை தகவல்கள், பாதுகாப்புத் திட்டமிடலில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் முறையாகப் பகிரப்படாததும் இந்த பாதுகாப்பு தோல்விக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தத் தாக்குதலில், டிரம்பை நோக்கி கட்டிடத்தின் கூரையிலிருந்து தாமஸ் க்ரூக்ஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உயிரிழந்தார். டிரம்ப் உட்பட மேலும் சிலர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஏற்கனவே பல்வேறு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், புதிய அறிக்கையும் அதே குறைபாடுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கண்காணிப்புக் குழு வழங்கிய 7 சீர்திருத்தப் பரிந்துரைகளையும் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அமெரிக்க இரகசிய சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், பாதுகாப்பு நடைமுறைகளில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
